இன்று 3வது ஒருநாள் போட்டி தொடரை வெல்ல இந்தியா முனைப்பு: சமன் செய்யுமா வெஸ்ட் இண்டீஸ்?

போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிரினிடாட், குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடுகிறது. முதலில் நடந்த டி20 தொடரில், அபாரமாக விளையாடிய இந்தியா 3-0 என ஒயிட் வாஷ் செய்து அசத்தியது. அடுத்து இரு அணிகளும் ஒருநாள் போட்டித் தொடரில் மோதி வருகின்றன. கயானா, புராவிடன்ஸ் மைதானத்தில் நடந்த முதல் போட்டி கனமழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், டிரினிடாடில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா டி/எல் விதிப்படி 59 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-0 என முன்னிலை பெற்றது. பேட்டிங்கில் கேப்டன் விராத் கோஹ்லி (120 ரன்), இளம் வீரர் ஷ்ரேயாஸ் அய்யர் (71 ரன்) அசத்தினர்.

பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் 4, ஷமி, குல்தீப் தலா 2, ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு உதவினர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் கிறிஸ் கேல் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறார். உலக கோப்பை தொடரில் ரன் குவிக்கத் தவறிய அவர், தற்போது சொந்த மண்ணில் நடந்து வரும் தொடரிலும் சொதப்பி வருவது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. லூயிஸ், பூரன் தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதாக ரன் எடுக்காததும் அந்த அணிக்கு பின்னடைவை கொடுத்துள்ளது. இந்த நிலையில், குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்கும் 3வது மற்றும் கடைசி போட்டியில் வென்று 2-0 என தொடரைக் கைப்பற்ற இந்திய அணி முனைப்பு காட்டுகிறது. அதே சமயம் 1-1 என சமன் செய்யும் உறுதியுடன் வெஸ்ட் இண்டீஸ் வரிந்துகட்டுவதால், ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யஜ்வேந்திர சாஹல், கேதார் ஜாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் சாய்னி. வெஸ்ட் இண்டீஸ்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கிறிஸ் கேல், ஜான் கேம்ப்பெல், எவின் லூயிஸ், ஷாய் ஹோப், ஷ்ம்ரோன் ஹெட்மயர், நிகோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ், பேபியன் ஆலன், கார்லோஸ் பிராத்வெயிட், கீமோ பால், ஷெல்டன் காட்ரெல், ஓஷேன் தாமஸ், கெமார் ரோச். நேரடி ஒளிபரப்பு: சோனி டென் 1 & 3.

Tags : ODI match, India, West Indies
× RELATED இந்திய அணி எதிரான 2-வது டி20 போட்டியில் 8...