காஷ்மீர் விவகாரத்தில் அதிபர் டிரம்ப் தலையிட மாட்டார்: இந்திய தூதர் திட்டவட்டம்

வாஷிங்டன்: ‘‘காஷ்மீர் விவகாரத்தில் தலையிடும் திட்டமில்லை என்பதை அதிபர் டிரம்ப் ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளார்,’’ என அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷ் வர்தன் சிரிங்க்லா கூறி உள்ளார். வெள்ளை மாளிகையில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் கூட்டாக பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப், ‘காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்து வைக்க இந்திய பிரதமர் மோடி என்னிடம் கேட்டுக் கொண்டார். அதற்கு தயாராக இருக்கிறேன்,’ என்றார். இதற்கு இந்தியா உடனடியாக மறுப்பு தெரிவித்தது. பிரதமர் மோடி அதுபோல் எந்த கோரிக்கையையும் விடுக்க வில்லை என தெளிவுபடுத்தியது. உடனே டிரம்ப், ‘இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் விரும்பினால் மட்டுமே காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுவேன்,’ என விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து வாஷிங்டனில் அமெரிக்காவிற்கான இந்திய தூதர் ஹர்ஷ் வர்தன் சிரிங்கலா, டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுவதில்லை என்பது அமெரிக்காவின் நீண்ட கால கொள்கை. ஆனால், இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தியா , பாகிஸ்தான் நாடுகள் ஏற்று கொண்டால் மட்டுமே, காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வேன் என டிரம்ப் கூறினார்.

அதை இந்தியா நிராகரித்து விட்டதால், அந்த திட்டம் பரிசீலனையில் இல்லை என்பதையும் டிரம்ப் தெளிவுபடுத்திவிட்டார். இதேபோல், சிம்லா, லாகூர் ஒப்பந்தப்படி, இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலம் காஷ்மீர் பிரச்னையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் ஐநா.வும் உறுதியாக உள்ளது. எனவே, இது மூன்றாம் நபர் தலையிட்டு தீர்க்கப்பட வேண்டிய விஷயம் அல்ல. எல்லை தாண்டிய தீவிரவாதம், வன்முறை சம்பவங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே காஷ்மீரில் தற்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மன்னிப்பு கேட்ட எம்பி

கடந்த 9ம் தேதி அமெரிக்க எம்பி டாம் சோஷி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பாம்பியோக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், ‘காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மனித உரிமை மீறல்கள் நடக்கும் சூழல் உருவாகி உள்ளது,’ என கவலை தெரிவித்தார். சோஷியின் தொகுதியில் இந்தியர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். இந்த கடிதம் தொடர்பாக சோஷியை சந்தித்த சுமார் 100 இந்தியர்கள், உடனடியாக கடிதத்தை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து நேற்று பேட்டி அளித்த சோஷி, ‘‘இந்தியர்களை கலந்தோசிக்காமல் கடிதம் எழுதிவிட்டேன். அதற்காக மன்னிப்பு கோருகிறேன். இந்த விஷயத்தில் முன்பே இந்தியர்களை சந்தித்து பேசியிருந்தால் எனது கவலையை வேறுவிதமாக வெளிப்படுத்தி இருப்பேன்,’’ என்றார்.

Related Stories: