சாலையில் சென்ற மக்களை கத்தியால் குத்திய முகமூடி நபர்: பெண் பலி சிட்னியில் பரபரப்பு

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் முகமூடி அணிந்த நபர் ஒருவர், சாலையில்  வேகமாக சென்ற மக்களை கண்மூடித்தனமாக கத்தியால் குத்தியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர்.  ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்றும் வழக்கம் போல் மக்கள் பரபரப்பாக காணப்பட்டனர். அப்போது, கிங் தெரு பகுதியில் முகமூடி அணிந்தபடி வந்த மர்ம நபர் ஒருவர், சாலைகளில் வேகமாக சென்று கொண்டிருந்தவர்களை கண்மூடிதனமாக கத்தியால் குத்தினார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த வழியாக வந்த பெண் ஒருவரையும் மர்ம நபர் கத்தியால் குத்தினார். அந்த பெண் அலறி கூச்சலிட்டார். பலர் காயமடைந்தனர்.  இதனையடுத்து மேலும் அந்த நபர், ‘என்னை சுட்டுக் கொல்லுங்கள்...’  என முழக்கமிட்டபடி, கையில் சமையலறையில் பயன்படுத்தும் மிகப்பெரிய கத்தியுடன் சாலையில் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தார்.

Advertising
Advertising

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். அதற்குள்ளாக அந்த பகுதி மக்கள் மர்நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த கட்டிடத்தில் இருந்து 21 வயது இளம்பெண் சடலம் மீட்கப்பட்டது. இந்த பெண்ணின் கொலைக்கும், முகமூடி நபருக்கும் தொடர்பிருக்கும் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.  முகமூடி அணிந்து கத்தி குத்து நடத்திய சம்பவத்தை அடுத்து கிளாரன்ஸ் சாலை முதல் யோக் சாலை வரை போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். பிடிபட்ட இளைஞர் பெயர் மெர்ட் நெய் (21). இவரை போலீஸ் காவலில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில் இவர் எந்த தீவிரவாத அமைப்புடனும் தொடர்பில்லாதவர் என்றும், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தைரியத்துடன் மர்மநபரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்களுக்கு பிரதமர் மோரிசன் டிவிட்டரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: