ஜம்மு-காஷ்மீரில் அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை தடுத்து வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது: மு.க.ஸ்டாலின் டுவிட்

சென்னை: காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை விடுவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது மற்றும் 35ஏ  ஆகிய சட்டப்பிரிவை நீக்கி காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை ரத்து செய்து காஷ்மீரை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், அதேபோல் லடாக் பகுதியை பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் உருவாக்கும் சட்டம்  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கியுள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும்  நடவடிக்கைகளுக்கு மாநிலத்தில் பரவலாக எதிர்ப்பு நிலவி வருகிறது.

இதனை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு ஊரடங்கு, தொலைதொடர்பு சேவைகள் துண்டிப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர்  கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அங்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளையும், கட்டுப்பாடுகளையும் உடனடியாக நீக்க உத்தரவிடக் கோரி காங்கிரஸ் ஆதரவாளர் தெசீன் பூனாவாலா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர். ஷா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழலை பொறுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்தது. இந்நிலையில், காஷ்மீர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜம்மு-காஷ்மீரில் அரசியல் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களை தடுத்து வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்கவும், அவர்களுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் எனவும் மத்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: