கேரளாவுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு... கட்சியினரை உதவுமாறு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: வெள்ளத்தில் மிதக்கும் கேரள மக்களுக்கு உதவிட முன்வருமாறு திமுகவினரை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களுடன் துணிகள், அத்தியாவசிய பொருட்களை கேரளாவுக்கு அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார். கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கடுமையான மழை பெய்து வருகிறது.

பல இடங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். மலப்புரம், வயநாடு, கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு மாவட்டங்களில் மிக அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் நிலச்சரிவுகளில் ஏராளமானோர் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. வயநாடு மாவட்டம் மேப்பாடி புத்துமலையில் நிலச்சரிவில் சிக்கிய 18 பேரில் இதுவரை 10 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த பகுதியில்அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருவதாலும், அந்த பகுதி முழுவதும் சகதி நிறைந்து காணப்படுவதாலும் மீட்பு படையினரும் பொதுமக்களும் உயிரை பணயம் வைத்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கேரள மக்களுக்கு உதவிட முன்வருமாறு திமுகவினரை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: