இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சேவை எதிர்த்து சஜித் பிரேமதாசா போட்டி?

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சேவை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சியின் துணை தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாசாவை களமிறக்க கட்சியில் ஆதரவு பெருகி வருகிறது. கொழும்புவில் பேசிய இலங்கை சிறப்பு மண்டல வளர்ச்சித்துறை அமைச்சர் வி.ராதாகிருஷ்ணன் தமிழ் மற்றும் சிங்கள சமூகத்திடம் சஜித் பிரேமதாசாவுக்கு நல்ல ஆதரவு இருப்பதாக கூறினார்.

கோத்தபயாவை எதிர்த்து போட்டியிட சஜித் தகுதியானவர் என்பதால் ஐக்கிய தேசிய கட்சி தலைவரான ரணில் விக்ரமசிங்கே இதனை கருத்தில் கொண்டு அதிபர் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இலங்கை பொதுசன பெரமனா கட்சி சார்பில் அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சே அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சிகள் எம்.பி.யும், வீட்டு வசதி துறை அமைச்சருமான சஜித் பிமேரதாசா போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். சஜித் மறைந்த முன்னாள் இலங்கை அதிபர் ரணசிங்கே பிரேமதாசாவின் மகன் ஆவார். இலங்கை அதிபர் தேர்தலில் களமிறங்கியிருக்கும் இருவருமே பௌத்த துறவிகள் அமைப்பினருக்கு நெருக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: