கிளி திருடியதாக சிறுவனை கடைக்குள் கட்டிப்போட்டு சித்ரவதை: 2 பேர் கைது

நாகை: நாகை புதுத்தெருவை சேர்ந்தவர் பரக்கத்துல்லா(26). இவர் தனது வீட்டில் பறவைகளை வளர்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் தனது வீட்டில் வளர்த்து வரும் பஞ்சவர்ணகிளி காணாமல் போனது.  வீட்டில் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவை சோதனை செய்தார். அப்போது, தனது  வீட்டிற்கு வந்த 3 சிறுவர்கள் பறவைகள் வளர்க்கும் இடத்திற்கு சென்று  அங்கிருந்த பஞ்சவர்ணகிளியை திருடி செல்வதை பார்த்தார். இதைவைத்து பரக்கத்துல்லா விசாரணை நடத்தினார். அப்போது திருவாரூர் மாவட்டம் கடாரம்கொண்டான் பகுதியை சேர்ந்த 15வயது மதிக்கதக்க சிறுவன் என்பது தெரியவந்தது. உடனே, தனது நண்பர் தாரீக்ரியாஸ்(28) என்பவருடன் நேற்று முன்தினம் இரவு திருவாரூர் சென்றார். அங்கு கேமராவில் பதிவான ஒரு சிறுவன் பிடிபட்டான். அவனை அழைத்துக் கொண்டு நாகை பப்ளிக்ஆபீஸ் சாலையில் உள்ள தாரீக்ரியாஸ்க்கு சொந்தமான ரெடிமேட் துணிகள் விற்பனை செய்யும் கடைக்கு வந்தனர்.

Advertising
Advertising

கடையில் வைத்து சிறுவனிடம் விசாரித்தனர். அவன் பதில் ஏதும் கூற மறுத்து மவுனமாக இருந்துள்ளான். இதையடுத்து, அவனை சேரில் கட்டிப்போட்டுவிட்டு கடையை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று பக்ரீத் பண்டிகை என்பதால் கடை திறக்கவில்லை. ஆனால், கடையில் இருந்து தன்னை காப்பாற்றும்படி சத்தம் வந்துள்ளது. இதனை அவ்வழியாக சென்றவர்கள், வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து  உரிமையாளருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், உரிமையாளர் தாரீக்ரியாஸ் வந்து கடையை திறந்தார். அந்நேரத்தில், சிறுவன் வெளியே வந்து விழுந்தான். உடனே, அவனை நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவனிடம் விசாரணை நடத்தியபோது, ``பரக்கத்துல்லா, தாரீக்ரியாஸ் ஆகிய இரண்டு பேரும் நேற்று முன்தினம் இரவு திருவாரூர் வந்து என்னை அழைத்து வந்தனர். நாகையில் உள்ள ரெடிமேட் கடையில் வைத்து கிளியை திருடியது குறித்து கேட்டுள்ளனர். நான் பதில்  ஏதும் கூறாததால் ஆத்திரத்தில் எனது கை, கால்களை கட்டிப்போட்டு விட்டு கடையை மூடிவிட்டு சென்றனர்’’ என்று சொன்னான். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 2  பேரையும் கைது செய்தனர்.

Related Stories: