பள்ளிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு விசாரணையை வீடியோ எடுத்த மாணவி தடுத்த பெண் ஏட்டை கடித்து குதறினார்: பெற்றோர் கைது

பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த ஆவாரங்காட்டை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி ஆறுமுகம்(50). இவரது மனைவி ஜெகதாம்பாள். இவர்களின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ராம்(50). அங்குள்ள பொது கழிப்பறையில் கட்டணம் வசூலித்து வருகிறார். இவரது மனைவி புவனேஷ்வரி(45). இவர்களது மகள் வாசுகி(25), மதுரையில் உள்ள கல்லூரியில் பி.டெக்., படித்து வருகிறார். நேற்று காலை வீட்டு முன்பு விறகு போடுவதில், ஆறுமுகம் மற்றும் ராம் குடும்பத்தினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆறுமுகத்தின் மனைவி ஜெகதாம்பாளை, ராம் சரமாரியாக தாக்கினார். இதுகுறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின்பேரில், பள்ளிபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், நேற்று மதியம் பள்ளிபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஆறுமுகம் மற்றும் ராம் குடும்பத்தினரை   வரவழைத்த போலீசார், அவர்களிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது ராம் மகள் வாசுகி, தனது செல்போனில் விசாரணையை வீடியோ எடுத்துள்ளார். இதைக்கண்ட போலீஸ் ஏட்டு சாந்தகுமாரி, வாசுகியை தடுத்து அவரது செல்போனை பறிக்க முயன்றார். அப்போது வாசுகியின் தாய் புவனேஷ்வரி, ஏட்டு சாந்தகுமாரியை கீழே தள்ளினார். மேலும், செல்போனை விட மறுத்த வாசுகி, சாந்தகுமாரியின் வலது கையை கடித்து குதறினார்.

Advertising
Advertising

இதைக்கண்ட காவலர்கள், காயமடைந்த ஏட்டு சாந்தகுமாரியை பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏட்டு சாந்தகுமாரி தன்னை தாக்கியதாகக் கூறி, மாணவி வாசுகியும் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதுகுறித்து, சாந்தகுமாரி கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, வாசுகியின் தாய் புவனேஷ்வரியை கைது செய்தனர். இதேபோல், வீட்டின் முன்பு விறகுக் கட்டைகளை போட்ட தகராறு தொடர்பாக, ஜெகதாம்பாள் கொடுத்த புகாரின்பேரில், புவனேஷ்வரியின் கணவர் ராமும் கைது செய்யப்பட்டார். மேலும், மாணவி வாசுகி மீது, ஆபாசமாக திட்டுதல், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: