4 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: மதுரை காப்பகம் மூடல்; நிர்வாகி கைது

வாடிப்பட்டி: மதுரை அருகேயுள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் படித்து வந்த 4 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காப்பகத்தின் ஊழியர் கைது செய்யப்பட்டார். காப்பகத்தில் தங்கியிருந்த அனைத்து மாணவிகளும் வேறு காப்பகத்திற்கு மாற்றப்பட்டு காப்பகம் மூடப்பட்டது.மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே சமயநல்லூரில் மாசா என்ற அறக்கட்டளை மூலம் அன்னை நியோமி அன்பு இல்லம் என்ற பெயரில் ஆதரவற்ற பெண் குழந்தைகள் காப்பகம்  உள்ளது. சூசைபிரகாசம் என்பவர் நடத்தி வரும் இக்காப்பகத்தில், 25 பெண் குழந்தைகள் தங்கி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.இந்த காப்பகத்தில் நிர்வாகியாக பணிபுரியும் மதுரையை அடுத்த நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த ஆதிசிவன் (48) இங்கு தங்கியுள்ள 4 சிறுமிகளை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக புகார் கிளம்பியது. இதுதொடர்பாக மதுரை சமூக பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்

சண்முகம் புகார் கொடுத்தார். அதன் பேரில்  போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், காப்பக நிர்வாகி ஆதிசிவனை கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளை வேறு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.வேறு ஏதேனும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனரா என  குழந்தைகள் நல அதிகாரிகள் மற்றும் போலீசார், மாதர் சங்கத்தினர் உள்ளிட்டோர் நேற்றுமுன்தினம் காப்பகத்தில்  சுமார் 4 மணிநேரத்திற்கும் மேலாக நேரடி விசாரணை மேற்கொண்டு  அதனை வீடியோ பதிவு செய்து சென்றனர்.

காப்பகத்தில் தங்கியிருந்த மீதமுள்ள 21 மாணவிகளையும் நேற்று பல்வேறு காப்பகங்களுக்கு பிரித்து அனுப்பினர். அதனைத்தொடர்ந்து காப்பகம் மூடப்பட்டது.

‘சிபிஐ விசாரணை வேண்டும்’

சமயநல்லூர் அருகே உள்ள ஆதரவற்றோர் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிர்வாகி ஆதிசிவன் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘இந்த காப்பகத்தில் 4 சிறுமிகள் மட்டுமே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது சரியா என உறுதியாக சொல்ல முடியாது. ஏனென்றால் இந்தக்குழந்தைகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தாமல் அப்படியே முத்துப்பட்டியில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பியுள்ளனர். எனவே இந்த 4 சிறுமிகளை மட்டுமல்லாமல் இந்த காப்பகத்தில் தங்கியிருந்த அனைத்து சிறுமிகளையும் மருத்துவப்பரிசோதனை ெசய்ய வேண்டும். அப்போதுதான் உண்மை நிலை தெரிய வரும். இச்சம்பவம் தொடர்பாக சிபிசிஜடி அல்லது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்’’ என்றனர்.

தொடரும் தொல்லை...

மதுரை மாவட்டத்தில் 58 ஆதரவற்ற காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் தலைமையில் கண்காணித்து வருகின்றனர். காப்பகத்தை நடத்த கட்டிட சான்றிதழ், சுகாதார சான்றிதழ் வருவாய்த்துறை சான்றிதழ் உள்ளிட்டவை வாங்க வேண்டும். இதற்கு குழந்தைகள் பாதுகாப்பு அலகு உதவ வேண்டும். சான்றிதழ் இல்லாத காப்பகங்கள் கலெக்டர் அனுமதியுடன் ‘சீல்’ வைக்க இவர்களுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் இதனை செய்வதில்லை.பல காப்பகங்கள் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் இவர்கள் உதவியுடன் செயல்பட்டு வருகிறது. எனவே, அரசு சான்றிதழ் இல்லாத காப்பகங்களை சீல் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  

Related Stories: