சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் காஷ்மீரில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை பறிபோகிறதா?

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரயில்வே, பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசின் புள்ளியியல், கணக்கு தணிக்கை, வருமான வரி அலுவலகங்கள், அமைச்சக செயலகங்களில் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த மாநிலத்தை சார்ந்த மத்திய அரசு ஊழியர்கள் எண்ணிக்கை குறைவு. இதனால் இங்கு பணியாற்றும் மற்ற மாநிலத்தவர்களுக்கு பல சிறப்பு சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.  இந்நிலையில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை ரத்து செய்து, அம்மாநிலத்தை ஜம்முகாஷ்மீர், லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என மத்திய பாஜ அரசு கடந்த 5ம்தேதி பாராளுமன்றத்தில் அறிவித்தது.

இதனால் அந்த மாநிலத்திற்கான சிறப்பு சலுகைகள் பறிபோவதால் அங்கு ரயில்வே உள்பட மத்திய அரசு துறைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களின் சலுகைகள் ஏதேனும் பறிபோகுமா? என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரனிடம் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது: ஜம்மு காஷ்மீரில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கான சலுகைகளை ஜனவரி 1- 2018 முதல் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஆண்டு துவக்கத்தில்தான் அரசு நீட்டித்தது.

அதற்கான உத்தரவை பர்சனல், பொது குறைகள் மற்றும் ஓய்வூதியத்திற்கான மத்திய அமைச்சகத்தின் கீழ் நிலை செயலாளர் சந்தீப் சக்சேனா கடந்த 8.1.2019 அன்று வெளியிட்டு இருந்தார். இந்த உத்தரவு மூலம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்தநாக், பாரமுல்லா, பத்காம், குப்வாரா, புல்வாமா, நகர், குல்காம், சாப்பியன், கந்தர்பால், பந்திபூரா என பத்து மாவட்டங்களில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்கள் சிறப்பு சலுகைகள் பெற்று வருகிறார்கள். காஷ்மீர் மாநிலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படாத மற்ற மாநிலத்தை சார்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி இரண்டு மடங்காக கிடைத்து வருகிறது. அவர்கள் விரும்பும் பட்சத்தில் குடும்பத்தை காஷ்மீர் கொண்டு சென்றால் மாத ஊதியத்தில் 80 விழுக்காடு போக்குவரத்து படியாக கிடைக்கும்.

குறைந்தது 6 மாதம் அல்லது அதற்கு மேல் காஷ்மீர் மாநிலத்தில் தங்கி பணி யாற்றினால் “காஷ்மீர் பள்ளத்தாக்கு சிறப்புபடி” கிடைக்கும். இந்தப்படி ரூ.1,800 முதல் ரூ.4,200 வரை தர ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ரூ.4500 ம், தர ஊதியம் ரூ,4,200 முதல் ரூ.4,800 வரை பெறும் ஊழியர்களுக்கு ரூ.6ஆயிரமும், அதற்கு மேல் வாங்கும் அதிகாரிகளுக்கு தகுதிக்கு ஏற்ப ரூ.7ஆயிரம் முதல் ரூ. 9ஆயிரம் வரை மாதந்தோறும் கிடைக்கும். மேலும் பணியாற்றும் இடம் அருகே குடும்பத்தை வைத்துக் கொள்ள முடியாத சூழல் இருந்தால் நாள் ஒன்றுக்கு ரூ.113 பேட்டா உண்டு. இதுதவிர காஷ்மீர் மாநிலம் சென்று பணியாற்றி வரும் மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உணவுப்படியாக நாள் ஒன்றுக்கு ரூ.97.85 கிடைக்கும். மாதம் ரூ.15ஆயிரம் முதல் ரூ.30ஆயிரம் வரை கூடுதல் வருமானம் கிடைப்பதால் பலர் விருப்பத்தில் காஷ்மீர் மாநிலம் சென்று பணியாற்றி வருகிறார்கள்.

சிறப்பு அந்தஸ்து ஜம்மு காஷ்மீருக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளதால், இதர மாநிலங்களுக்கு மத்திய அரசால் அனுப்பப்படும் ஊழியர்களை போலவே இங்கு சென்று பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களும் இனி கருதப்படுவார்கள். இதனால் காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கான சிறப்பு சலுகைகள் கிடைக்காது. இவர்களுக்கு சலுகைகள் கிடைப்பது இனி அரசு எடுக்கும் முடிவை பொருத்தது. இவ்வாறு மனோகரன் கூறினார்.

Related Stories: