அதிக முதலீடு இல்லாமல் வருவாய் அள்ளிதரும் தேனீ வளர்ப்பு

தேனீ வளர்ப்பின் மூலம் வருவாய் கொட்டும் என வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் விளக்கமளித்தனர். தேனீ வளர்ப்பின் வரலாறு பன்னெடுங்காலத்திற்கு முற்பட்டது. மலை மற்றும் காடுகளில் வாழ்ந்த நம் பண்டைய மனிதர்கள் சுவைத்த இனிப்பு உணவு தேன் ஆகும். தேனீ வளர்ப்பு வேளாண்மை சார்ந்த தொழில்களில் அதிக முதலீடு இல்லாமல் தொடர்ந்து வருமானம் தரக்கூடிய உபதொழிலாகும். இன்றைய காலகட்டத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை குறைப்பதற்கும், கிராம பண்ணை மகளிரும் வருவாய் ஈட்டும் தொழிலாக தேனீ வளர்ப்பு விளங்குகிறது. இதனால் தனி மனித வருமானமும், கிராமப் பொருளாதாரமும் உயரும். மேலும் தேனீக்களினால் அயல் மகரந்தச் சேர்க்கையானது நடைபெற்று வேளாண் உற்பத்தியும் அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது பூச்சிகளால் நடைபெறும் மகரந்தச் சேர்க்கையில் 80 சதம் தேனீக்களால் மட்டுமே நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர்கள் ராஜா ரமேஷ், ராமசுப்பிரமணியன் ஆகியோர் கூறியதாவது: இந்தியாவில் 2017-18ம் ஆண்டில் 1.05 லட்சம் மெட்ரிக் டன் தேன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் 51,547 மெட்ரிக் டன் தேனானது அதாவது உற்பத்தியில் 50 சதத்திற்கும் மேல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 35 லட்சம் தேனீ பெட்டிகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 2019 நிலவரப்படி மொத்தம் 9091 தேனீ வளர்ப்பு சங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் தேனீ வளர்ப்போர் பதிவு செய்துள்ளனர்.

உலக அளவில் தனி மனித சராசரியாக ஆண்டுக்கு 250 முதல் 300 கிராம் தேன் உண்ணப்படுகிறது. ஆனால் இந்தியாவில் சராசரியாக 50 கிராம் மட்டுமே தேன் உண்ணப்படுகிறது. உலக அளவில் அதிக அளவாக ஜெர்மனியில் ஆண்டொன்றுக்கு 2 கிலோ தேன் உண்ணப்படுகிறது. ஆசியா கண்டத்தைப் பொறுத்தளவில் ஜப்பானில் அதிக அளவாக 700 கிராம் தேன் உண்ணப்படுகிறது. தேனீ வளர்ப்பிற்கான மூலப்பொருளானது பூக்களில் இருக்கும் மகரந்தம் ஆகும். காட்டு வகை மற்றும் சாகுபடி செய்யப்படும் 500க்கும் மேற்பட்ட வகையான பூக்கும் தாவரங்களானது மகரந்தத்திற்கு முக்கிய ஆதாரமாகத் திகழ்கிறது. அறிவியல்பூர்வமான தேனீ வளர்ப்பானது 19ம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கப்பட்டது. தேனீ வளர்ப்பின் வாயிலாக கிடைக்கும் வருமானத்தை விட தேனீக்களால் நிகழும் அயல் மகரந்தச் சேர்க்கையின் வாயிலாக அதிக விளைச்சலினால் கிடைக்கும் வருவாயானது அதிகமாகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அயல் மகரந்த சேர்க்கை நடைபெறும் பயிர்கள்

மா, கொய்யா, மாதுளை, சீத்தாப்பழம், அத்தி, பப்பாளி, ஆப்பிள், திராட்சை, பேரிக்காய் போன்ற பழவகை பயிர்களிலும், கத்திரி, வெண்டை, தக்காளி, கொத்தமல்லி, வெங்காயம், பூசணி, முட்டைக்கோசு, காலிப்பிளவர், கேரட் போன்ற காய்கறி வகைகளிலும், எள், சூரியகாந்தி, கடுகு மற்றும் தென்னை, கோகோ, தர்பூசணி உள்ளிட்ட எண்ணெய்வித்துப் பயிர்களிலும் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதில் தேனீக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. தேனில் கார்போஹைட்ரேட், நார்சத்து, வைட்டமின் பி3, பி6 வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் துத்தநாக சத்துக்கள் அடங்கியுள்ளன. இவ்வாறு வேளாண் பேராசிரியர் கள் ராஜா ரமேஷ், ராமசுப்பிரமணியன் ஆகியோர் கூறினர்.

Related Stories: