மரம் வளர்த்தால் இன்ஜினியராகலாம்!

நன்றி குங்குமம் தோழி

சென்னையில் சமீபகாலமாக தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. இத்தனைக்கும் மாநகரை சுற்றி செம்பரப்பாக்கம் ஏரி, புழல் ஏரி, சோழவரம் ஏரி, போரூர் ஏரி, பூண்டி ஏரி என பல உள்ளன. ஆனாலும் அரசின் அலட்சியப்போக்கால் கோடையில் ஏரிகள் வற்றி விடுவதுடன் நிலத்தடி நீரும் குறைந்து தண்ணீர் பற்றாக்குறை தலைதூக்கியுள்ளது.

ஆனால் பாலைவன மாநிலமாக கருதப்படும் ராஜஸ்தான் மாநிலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதில்லை. அதற்கு அங்கு ஆளும் காங்கிரஸ் அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகளும் காரணம். ஆமாம் இன்ஜினியராக பட்டம் பெற வேண்டும் என்றால் அந்த பெண் நிச்சயம் ஒரு மரக்கன்றை ஊன்றி அதை 4 வருடத்தில் வளர்த்து ஆளாக்கினால்தான் பட்டதாரியாக முடியும். இது என்ன புதுசா இருக்கு என்கிறீர்களா... தொடர்ந்து படியுங்கள்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன்  இணைந்து ராஜஸ்தான் அரசு குடிநீர் பற்றாக்குறை, நிலத்தடி நீர்வளத்தை உயர்த்த பல முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் உச்சகட்டமாக தான் மரத்தை வளர்க்கிறியா, குளத்தை வெட்டுறியா என இன்ஜினியரிங் மாணவ, மாணவிகளுக்கு டாஸ்க் வைத்துள்ளது. இல்லை என்றால் பட்டம் கிடைக்காது என்கிறது அரசு உத்தரவு ஒன்று. பிறகு என்ன மரக்கன்றுகள் மண்வெட்டியுடன் புறப்பட்டு விட்டது மாணவர் படை.

இப்போது இன்ஜினியரிங் படிப்பவர்கள் கையில் காம்பஸ் இருக்கோ இல்லையோ கட்டாயம் மண்வெட்டி, தண்ணீர் குடம் இருக்கிறது. கல்லூரியில் சேர்க்கை ஆன அடுத்த நிமிடமே மரக்கன்றை கல்லூரி வளாகத்தில் நட்டு வைத்து வளர்க்க தொடங்கவேண்டும். அல்லது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் விதமாக மாணவர்கள் சேர்ந்து குளத்தை வெட்டவேண்டும். தினமும் சிலமணிநேரம் கல்லூரி வளாகத்தை தூய்மைப்படுத்த வேண்டும். இதனால் பெரும்பாலான மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுத்துள்ளது மரம் வளர்ப்பைதான்.

சமீபத்தில் தொடங்கிய கல்லூரி அட்மிஷன் முதல் மரம் வளர்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மரக்கன்றை ஊன்றி அதன் அருகே அதை வளர்க்கும் மாணவர் அல்லது மாணவி பெயர் பலகை வைக்கப்படும். தினமும் அதற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து வரவேண்டும். 4 ஆண்டு முடிவில் மரம் வளர்ந்துள்ளதை நிபுணர் குழு பார்வையிட்டு ஓகே சொன்ன பிறகு தான் இன்ஜினியரிங் பட்டம் பெறமுடியும்.

ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 3500 பேர் இன்ஜினியரிங் படிப்பில் சேர்வார்கள் என்பதால் 4 ஆண்டு முடிவில் அத்தனை மரங்கன்றுகளும் மரங்களாக வளர்ந்து பாலைவன மாநிலத்தை சோலையாக மாற்றும் என்பதே அரசின் திட்டம்.

கோமதி பாஸ்கரன்

Related Stories: