×

குழந்தை துறுதுறுன்னு இருக்கா?

என் பெயர் சித்ரா. எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். என் இரண்டாவது மகன் துறுதுறுவென்று இருப்பான். சிலசமயம் அவன் தனி உலகில் இருப்பான். ஒரு சிலர் அவனுக்கு Hyperactive பிரச்னையாக இருக்கலாம் என்கிறார்கள். சிலர் Autism ஆக இருக்கக்கூடும் என்கிறார்கள். டாக்டரிடம் கேட்டபோது அவர் எந்த பிரச்னையும் இல்லை என்கிறார். எனக்கு பயமாக உள்ளது. அவனுக்கு இந்த பிரச்னை இருந்தால் என்ன மாதிரியாக அவர்கள் செயல்படுவார்கள் என்று ஆலோசனை கூறுங்கள்.

“இந்தியாவில் நூற்றுக்கு பத்து குழந்தைகளில் ஒன்று Autism அல்லது Hyperactive குழந்தையாக இருக்கலாம். இது ஒரு குறைபாடுதான். முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்” என்கிறார் குழந்தை மனநல ஆலோசகர் சரண்யா.“நம் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றம்தான் இந்த இரு பிரச்னைக்கும் காரணம். ஒரு செயலைச் செய்யும்போது அதற்கான சிக்னல்களை செல்கள் மூளைக்கு எடுத்துச் செல்லும். Autism அல்லது Hyperactive குழந்தைகளுக்கு அந்த செல்கள் தன் வேலையைச் சரியாகச் செய்யாது. ஒரு முறை சொன்னால் புரிந்துகொள்ள மாட்டார்கள். பலவித பரிணாமங்களில் அவர்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும். இந்த குழந்தைகளுக்கு சின்ன பிரச்னை ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த பிரச்னையை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் அதனை எளிதில் குணப்படுத்த முடியும். இந்த சிறப்பு குழந்தைகளை பொருத்தவரை, அவர்கள் போக்கில் விட்டு அவர்கள் விரும்பும் துறையில் சாதிக்க விடவேண்டும்.எல்லா குழந்தைகளுக்கும் தனி உலகம் உண்டு. Autism மற்றும் Hyperactive குழந்தைகளின் உலகில் பெற்றோர் மட்டுமே நிறைந்திருப்பார்கள். சுட்டித்தனம் செய்யாத குழந்தைகள் இல்லை. இந்த குழந்தைகள் ரொம்ப சுட்டித்தனமாக இருப்பார்கள். ஒரு இடத்தில் ஐந்து நிமிடம் அமைதியாக இருக்க மாட்டார்கள். ஆனால் Autism குழந்தைகள் மிகவும் அமைதியாக இருப்பார்கள். நாம் ‘எழுந்திரு’ என்று சொல்லும் வரை அதே இடத்தில் அசையாமல் உட்கார்ந்து இருப்பார்கள்.

*Autism மற்றும் Hyperactive குழந்தைகள் மற்ற குழந்தைகளோடு விளையாட மாட்டார்கள். பெரியவர்கள் சொன்னால்தான் மற்றவர்களுடன் விளையாடுவார்கள்.

*தனக்குத்தானே பேசிக்கொள்வார்கள். நம் கண்களை நேராகப் பார்த்து பேச மாட்டார்கள். பேசும்போது அவர்களின் கண்கள் ஓரிடத்தில் நிலையாக இருக்காது.

*தனியாக எங்கும் போக மாட்டார்கள். எந்த வேலையும் தனியாகச் செய்ய மாட்டார்கள். பெரியவர்கள்
கட்டளை இட்டால் மட்டுமே செய்வார்கள்.

*திடீரென்று குதிப்பார்கள், சிரிப்பார்கள். அவர்களின் உலகம் தனி என்பதால் அந்த சமயம் என்ன தோன்றுகிறதோ அதைச் செய்வார்கள்.

*ஒரு பொருளை எடுத்தால் அதை பம்பரம்போல் சுற்றி விளையாடுவார்கள்.

*ஒரு விஷயம் பிடித்து இருந்தால் அதை வேகமாகச் செய்து முடிப்பார்கள்.

இதுபோன்ற சின்னச்சின்ன வித்தியாசங்கள்தான் இவர்களிடம் தென்படும். அதைக்கொண்டு இவர்கள் மூளை வளர்ச்சி குன்றியவர்கள் என்று கூறிட முடியாது. அவர்கள் உண்மையில் அப்படி கிடையாது. இவர்கள் சிறப்பு குழந்தைகள். காரணம் இவர்கள் சில துறைகளில் திறமைசாலிகளாக இருப்பார்கள். சிலர் நன்றாக வரைவார்கள். சிலர் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஆய்வு செய்வார்கள். அவர்களின் திறமையைக் கண்டறிந்து அதற்கு ஏற்ப பயிற்சி கொடுப்பது அவசியம்.

இவர்களை சில கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். அதன்மூலம், அவர்கள் இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று புரிந்துகொள்வார்கள். அவர்களுக்கு தினமும் என்னென்ன செய்ய வேண்டும் என்று அட்டவணை போட்டுக் கொடுத்திட வேண்டும். அதன்படி அவர்களை நடக்கச் செய்ய வேண்டும். இந்த அட்டவணையை பெற்றோர்களும் பின்பற்ற வேண்டும். இதுபோல் அனைத்து விஷயங்களிலும் பெற்றோர்கள் உடன் இருந்து அவர்களுக்கு உறுதுணையாக செயல்பட வேண்டும்.

சிறப்பு குழந்தைகளின் மனநிலை ஒரே மாதிரி இருக்காது. அவர்களின் மனப்போக்கை புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும். சிலருக்கு படிக்கப் பிடிக்காது. அவர்களுக்கு படங்கள் கொண்டு புரிய வைக்கலாம். Hyper Active குழந்தைகள் அதிகம் டி.வி. பார்க்க விடாமல் அவர்களுக்கு ஏற்ற வேலைகளைச் செய்ய கற்றுத்தரலாம். சில குழந்தைகளின் கேட்கும் திறன் குறைவாக இருக்கும். அவர்களுக்கு படங்களை பார்த்து கற்றுத்தலாம். இதுபோல் அவர்களின் குறைகளை அறிந்து அதற்கேற்ப மாற்றினை அறிந்து செயல்பட வேண்டியது ஒவ்வொரு சிறப்பு குழந்தைகளின் பெற்றோரின் கனவாகும். ஆலோசகர்கள் அளிக்கும் கவுன்சிலிங் மற்றும் சிகிச்சை முறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்” என்கிறார் சரண்யா.
 
தொகுப்பு: ப்ரியா

Tags : Child, chastity, autism, hyperactive
× RELATED ஆம்பூர் அருகே பரிதாபம்: குளத்தில்...