×

குழந்தைகள் பிராய்லர் கோழிகள் அல்ல! பெருகி வரும் Over parenting விபரீதம்

சமீபத்தில் ஓர் இணையதளத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. ஒருவர் ஒன்றரை வயதான தன் குழந்தையை ஒரு மருத்துவராக்க விரும்புவதாகவும் இதற்காக அவனை எந்தப் பள்ளியில் சேர்ப்பது சிறந்தது என்றும் கேட்டிருந்தார். அதற்கு ஒருவர் மிகவும் கிண்டலாக பதில் சொல்லியிருந்தார். ‘என்னது ஒன்றரை வயதாகிவிட்டதா? அச்சோ! நீங்கள் ஏன் இவ்வளவு தாமதமாக இருக்கிறீர்கள். இத்தனை நாட்களாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள். ஒருவர் மருத்துவராவது எவ்வளவு கடினம்? அதற்காக நாம் ஒரு பொறுப்புள்ள பெற்றோராக அவர் பிறக்கும் முன்பே திட்டமிட்டிருக்க வேண்டாமா? நீங்கள் உங்கள் மகனை டாக்டராக்குவதற்கான தகுதியை இழந்துவிட்டீர்கள்’ என்று தெரிவித்திருந்தார். இதில் கொடுமை என்ன தெரியுமா? அந்த கேள்வி கேட்ட ஆசாமி அது ஒரு பகடி என்பதுகூடப் புரியாமல் அவரிடம் மிக சீரியஸாக உரையாடிக்கொண்டிருந்ததுதான்.

யோசித்துப் பாருங்கள். ஒருவர் மருத்துவராக வேண்டுமா வேண்டாமா என்பதை யார் முடிவு செய்வது அவரது தாய் தந்தையரா? ஆசிரியரா? பிரசவம் பார்த்த மருத்துவரா? உண்மையில் இது எல்லாம் இவர்கள் கையிலா இருக்கிறது? அந்தக் குழந்தைக்கு என்று தனிப்பட்ட ஆர்வம், ஆசை, இலட்சியம் இதெல்லாம் இருக்கக் கூடாதா? நம் குழந்தைகளுக்கு பாதுகாப்பான, செளகர்யமான, சிறப்பான எதிர்காலம் அமைய வேண்டும் என்ற பதற்றத்தில் நாம் என்னவெல்லாம் செய்துகொண்டிருக்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள். நிஜமாகவே, நம் சூழல் கவலைக்கிடமான இடத்தில்தான் இருக்கிறது என்பது புரியும்.

இதை ஆங்கிலத்தில் ஓவர் பேரண்டிங், ஹெலிகாப்டர் பேரண்டிங், டெத் கிரிப் (மரணப்பிடி) பேரண்டிங், ஹாட்ஹவுஸ் (கொதிக்கும் இல்ல) பேரண்டிங் என்று பலவகையான சொற்களால் அழைக்கிறார்கள். எத்தனை கலைச் சொற்களால் அழைத்தாலும் பிரச்னை ஒன்றுதான். அது அதீத ஆர்வத்தால் குழந்தைகளின் நலனைக் கெடுப்பது. விட்டால் தானாகவே தனக்கென ஒரு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கத் திராணியுள்ள குழந்தையை இன்ஜினியர் ஆக்குகிறேன். விஞ்ஞானி ஆக்குகிறேன் என்று போட்டுப் பிழிந்து அதை யாராகவும் ஆக்க விடாமல் அவராகவும் இருக்க விடாமல் சர்வம் சிக்கல் மயம் என்று ஆக்கிவிடுகிறார்கள்.

ஒரு நண்பர் தன் மனைவி கர்ப்பம் தரித்ததுமே சிம்பொனி இசைத்தட்டுகளுடன் வீட்டுக்குள் நுழைந்தார். அன்று முதல் தினமும் ஒரு மணி நேரம் உறங்கும் முன்பு சிம்பொனி இசையைக் கேட்டுவிட்டுதான் உறங்க வேண்டுமாம். அது மட்டும் இல்லாமல் வீட்டில் எப்போதும் மெலிதாக ஏதேனும் ஒரு கர்நாடக சங்கீதமோ, சாஸ்திரிய இசையோ ஒலித்துக்கொண்டேதான் இருக்க வேண்டும் என்று உத்தரவு வேறு. பிறக்கும் குழந்தையை எம்.எஸ்.சுப்புலட்சுமி போலவோ இளையராஜா போலவோ பெரும் இசைக் கலைஞர் ஆக்க வேண்டுமாம் அதற்காகத்தான் இந்த பிரம்ம பிரயத்தனம். கர்ப்பமாக இருக்கும் பெண் தினசரி கொஞ்ச நேரம் இசை கேட்டால் அவர் மனதும் வயிற்றில் இருக்கும் கருவும் மகிழ்ச்சியடையும் இதனால் தாய்க்கும் குழந்தைக்குமான ஒத்துறவு மேம்படும் என்பது எல்லாம் உண்மைதான்.

இசை கேட்பதால் தவறும் இல்லை. ஆனால், அதற்காக இசையாகக் கேட்டு கொலையாகக் கொன்றால் எப்படி பாஸ்? அந்தக் குழந்தை சிந்திப்பதற்காக (ஆமாம் கருவில் உள்ள குழந்தைக்கும் சிந்தனை உண்டு)  உறங்குவதற்காக, வெறுமையை உணர்வதற்காக என சிறிது இடைவெளியாவது விட வேண்டாமா? இப்படி வேண்டா வெறுப்பாக இசையைக் கேட்டுக்கொண்டே இருந்தால் அந்த தாயின் மனநிலை என்னாகும்? தாயின் உணர்வலைகள் குழந்தையைப் பாதிக்காதா? என்னதான் குழந்தை நன்றாகப் பிறக்க வேண்டும் என்ற அக்கறை கொண்ட தாயாக இருந்தாலும் இப்படி எல்லாம் தியாகம் செய்யச் சொல்லி அவரை வதைப்பது மானுட மீறல் அல்லவா? ஏன் வாழ்க்கையை இவ்வளவு சீரியஸாக, ஒற்றைப்படையாக, ஒரு போர் போல எடுத்துக்கொள்ள வேண்டும்.

சரி இதாவது பரவாயில்லை இசை. ஒருவகையில் மனதுக்கு ரம்யமான ஒரு விஷயம்தான். இன்னொரு நண்பர் பிறந்து ஆறு மாதங்களே ஆன ஒரு குழந்தைக்கு பேபி ஐன்ஸ்டின் என்ற வீடியோ கிட்டை வாங்கிக்கொண்டு வந்து போட்டுக் காட்டிக்கொண்டிருந்தார். இதெல்லம் நிஜமான வன்முறை. அந்தக் குழந்தை அசையும் உருவங்களை கண்கொண்டு பார்க்கத் தொடங்கியே மூன்று மாதங்கள்தான் ஆகியிருக்கும். இன்னமும் நிற வேறபாடுகளை துல்லியமாக அறியும் திறனை முழுமையாகப் பெற்றிருக்கவே செய்யாது. சொற்களில் பெரும்பகுதி புரியாது. சம்மணமிட்டு சில விநாடிகளுக்கு மேல் அமரும் அளவு முதுகெலும்புக்கு வலு இருக்காது. எலெக்ட்ரானிக் ஒளிர்திரைகளைத் தாங்கும் அளவுக்கு அதன் கண்களுக்கு வைட்டமின் பலம் இருக்காது. அந்தக் குழந்தையின் கையில் ஒரு மின்னணு சாதனத்தைக் கொடுத்து அதைப் பார்க்கச் செய்வது எல்லாம் மிக மோசமான வன்முறை என்பதைக்கூட புரியாமல் ஏதோ ஒரு பொம்மை தயாரிக்கும் நிறுவனம் விற்கிறதென இவரும் வாங்கிக்கொண்டு வந்து அதை அக்குழந்தைக்குப் போட்டுக் காட்டிக்கொண்டிருக்கிறார். அரை பல் முளைத்த அந்த சிசுவோ எதுவும் புரியாமல் அதை கையில் எடுத்து வாயில் கடித்துப் புரிய முயற்சிக்கிறது.

நமக்கு நம் குழந்தை ஐன்ஸ்டின் போல் பெரிய விஞ்ஞானியாக வேண்டும் என்ற ஆசை இருக்கலாம். அதில்கூட பெரிய தவறு இல்லை. ஆனால், நம் குழந்தை போதுமான அளவு வளரவாவது நாம் அனுமதிக்க வேண்டும் அல்லவா? இப்படியா பிஞ்சிலேயே அதன் முதுகெலும்பை முறிப்பது.
கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள் இப்படியா நம்மை நம் பெற்றோர் வளர்த்தார்கள். நம் பெற்றோர் நமக்குக் கொடுத்த சுதந்திரத்தை நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்க மறுப்பது என்ன நியாயம். அதையும் அன்பு, அக்கறை என்ற பெயரிலேயே இத்தனை வன்முறைகளையும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள் நிறைய பெற்றோர்.

புதிதாய் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கே இவ்வளவு டார்ச்சர் என்றால் மற்ற குழந்தைகள் நிலையைக் கேட்கவா வேண்டும்? பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்தவுடனேயே குழந்தைகளின் சுமை கூடிவிடுகிறது. அதிகாலை நாலு மணிக்கு எழுந்து தங்கள் மதம் சார்ந்த கல்வியை கற்க ஓடிப்போய் காலை எட்டு மணிக்குத் திரும்ப வந்து உண்டும் உண்ணாமலும் பள்ளிக்கூடத்துக்குப் போய் பாடங்கள் கற்றுவிட்டு மாலை வீட்டுக்கு வந்ததும் கை, கால், முகம் கழுவிவிட்டு டியூஷனுக்கு ஓடிப்போய் இரவில் திரும்பி, ஹோம் வொர்க் செய்துவிட்டு படுத்தால் அந்தக் குழந்தை அடித்துபோட்டது போல் உறங்குகிறது. ஒருவேளை சில குழந்தைகளை உறக்கத்தில்கூட பள்ளியும் வீடும் கனவில் வந்து மிரட்டுமாய் இருக்கும். ஆச்சாரமான குடும்பங்களில் இப்படி என்றால் நாங்க ரொம்ப மாடர்ன் என்று அலட்டிக்கொள்ளும் குடும்பங்களோ ஸ்விம்மிங், ஹார்ஷ் ரைடிங், கராத்தே, கர்நாடிக் மியூசிக், வெஸ்டர் மியூசிக், டான்ஸ் என்று விதவிதமாய் டாஸ்குகள் வைத்து தம் குழந்தைகளை வதைக்கின்றன.

வீட்டில் வசிக்கும் குழந்தைகள் கதியே இப்படி என்றால் வீட்டுக்கு வெளியே ஹாஸ்டலில் வசிக்கும் குழந்ைதகள் கதியோ சொல்லவே வேண்டியதில்லை. இன்று நிறைய உண்டு உறைவிடப் பள்ளிகள் வந்துவிட்டன. இவற்றில் நிகழும் குழந்தைகள் மீதான வன்முறைகளுக்கு எல்லாம் அளவே இல்லை. காலை முதல் இரவு வரை படிப்பு படிப்பு படிப்பு. கூண்டில் அடைத்து பிராய்லர் கோழிகளை வளர்ப்பதுபோல இங்கு அறைக்குள் அடைத்துவைத்து குழந்தைகளை வளர்க்கிறார்கள்.குழந்தைகள் உறங்கும்போதும் மகிழ்ச்சியுடன் விளையாடும்போதுமே ஆரோக்கியமாய் வளர்கிறார்கள் என்கிறது நவீன மருத்துவம். அதாவது, குழந்தைகளின் உடலில் உள்ள க்ரோத் ஹார்மோன் என்ற வளர்ச்சிக்கான ஹார்மோன் சுரப்பு அவர்கள் உளவியல்ரீதியாக நிம்மதியாக, ஆசுவாசமாக இருக்கும்போது சிறப்பாக செயல்படும் என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், உடல் உழைப்பு என்பது குழந்தைகளோ பெரியவர்களோ அனைவருக்குமே அவசியம். பெரியவர்கள் என்றால் உடல் உழைப்பு இல்லாத தொழில் செய்பவர்கள் உடற்பயிற்சி செய்யுங்கள் என்று சொல்லிவிடலாம். பதினாறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டு ஒன்றுதான் மிகச் சிறந்த உடற்பயிற்சி. நாள்தோறும் அவர்கள் உடலில் சேரும் உணவுப் பொருட்களில் உள்ள சத்துகள் ஆற்றலாக மாறுகின்றன. அதை அவர்கள் விளையாடி செலவழிக்காவிட்டால் அது தேவையற்ற ஊளைசதையாக கொழுப்பாக அவர்கள் உடலில் தேங்கிவிடுகிறது.

இதனால்தான் இன்று குழந்தைகளுக்குகூட தொப்பையும் ஊளைச்சதையும் உள்ளன. இளம்பருவத்தினருக்கான ஒபிஸிட்டி என்பது இந்தியாவில் அசுர வேகத்தில் வளர்ந்துவரும் ஒரு பிரச்சனையாக உருவெடுத்துக்கொண்டுள்ளது. ஒபிஸிட்டி என்பது தனியான பிரச்சனை அல்ல. அதுவந்தால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள் போன்ற அதன் நண்பர்களும் கூட வருவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. குழந்தைகளுக்கு ஒபிஸிட்டி வரும்போது உயர் ரத்த அழுத்தமும் வருகிறது. இதனால் மிக இளம் வயதிலேயே டைட் II டயாபடீஸ் மற்றும் இதய நோய் வருவதற்கான வாய்ப்பும் உள்ளது.குழந்தைகளுக்கு பி.பி வருமா என்று சிலர் வியப்பாக கேட்கலாம். இந்தியாவில் பதினைந்து வயதுக்குட்பட்டவர்களில் சுமார் இருபத்தொரு சதவிகிதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது சமீபத்தைய புள்ளிவிவரம் ஒன்று.

இப்படி உயர் ரத்த அழுத்தம் வருவதற்கு உடற்பருமன் மட்டுமே காரணம் அல்ல. ஸ்ட்ரெஸ் எனும் மன அழுத்தம், ஆங்சைட்டி எனும்
மனப்பதற்றம் ஆகியவையும் ஒரு முக்கியமான காரணம். எப்படியாவது மகன் டாக்டராகிவிட வேண்டும். இன்ஜினியராகிவிட வேண்டும். விஞ்ஞானியாகிவிட வேண்டும். கிரிக்கெட்டராகிவிட வேண்டும் என்று மனக்கோட்டை கட்டும் பெற்றோர்களால் பிள்ளைகளின் டென்ஷன் அதிகரிக்கிறது. பெற்றோர் மற்றும் அவர்களின் குடும்பச் சூழல், பள்ளிச் சூழல் தரும் அழுத்தங்கள் ஒரு குழந்தையை மிக மோசமாக பாதிக்கும் தன்மையுடையது. இதனாலேயே பல லட்சியவாதப் பெற்றோர்களின் குழந்தைகள் மனப் பதற்றத்தால் தவிக்கிறார்கள். இளவயதிலேயே பி.பி ஏற்பட்டு மருகுகிறார்கள்.

நவீன மருத்துவம் குழந்தையின் மூளை வளர்ச்சி பற்றிக் கூறும்போது பிளாஸ்டிசிட்டி என்று ஒரு கருத்தை முன் வைக்கிறது. அதாவது நெகிழ்வுத்தன்மை. ஒரு பிறந்த குழந்தையின் மூளை களிமண் போல் மிகவும் குழைவானதாக எந்த ஒரு வடிவத்துக்கும் மாற்ற ஏற்றதாக உள்ளது. அந்தக் குழந்தை வளர வளர அதற்கு ஏற்படும் அனுபவங்கள் அதன் அறிவு நிலையையும் உணர்வு நிலையையும் பாதித்து அந்தக் களிமண்ணை ஒரு சிற்பம் போல் வனைகின்றன. இது ஓர் இயற்கையான செயல்பாடு. ஒரு குழந்தையை எல்லாவகை உணர்வுகள், மனநிலைகள், அறிவு நிலைகள் ஆகிய சூழலிலும் வளர நாம் அனுமதிக்க வேண்டும். அவர்கள் இயல்பாக வளரும்போதுதான் அவர்களின் மூளையின் செயல்பாட்டைத் தூண்டும் ஹார்மோன்கள் மற்றும் சுரப்புகளும் இயல்பாக இருக்கும்.

அவர்கள் ஆசை விருப்பம் ஆகியவற்றுக்கு மாறாக அவர்கள் மீது நம் விருப்பங்களைத் திணிக்கும்போதும் கட்டாயப்படுத்தும்போதும் அவர்கள் ஈடுபாடும் செயல்திறனும் குறைகின்றன. இது அந்த விஷயத்தில் மட்டும் அல்லாது. ஒட்டுமொத்தமாகவே அவர்கள் செயல்பாட்டில் ஒருவித மந்தத்தன்மையை உருவாக்கிவிடுகிறது. எனவே, உங்கள் குழந்தைகளை இயல்பாக வளர அனுமதியுங்கள். அந்தக் குழந்தைக்கு எதில் ஆர்வம் உண்டு. அதில் எவ்வளவு ஆர்வம் உண்டு என்பதை போதுமான அளவு உரையாடுவதன் மூலம் கண்டுபிடித்து அதில் அவர்களை ஈடுபடுத்துங்கள். அந்த விஷயத்தில் அவர்கள் எவ்வளவு சிறப்பாக ஈடுபடுகிறார்களோ அந்த அளவு ஈடுபடட்டும். அதுதான் இயல்பான வளர்ச்சியாக இருக்கும். அதன் மீது குறுக்கீடு நிகழ்த்தும்போது நாம் விரும்பியதும் நிகழாமல் அவர்கள் விரும்பியதும் நிகழாமல் மோசமான பின்விளைவுகள் உருவாகவே வாய்ப்புகள் அதிகம்.

ஓவர் பேரண்டிங்கில் இன்னொரு விஷயம். குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமான செல்லம் கொடுப்பது. நான்தான் சிறுவயதில் கஷ்டப்பட்டேன். ஒரு சாக்லெட்கூட வாங்கித்திண்ண இயலாது. இவனாவது ஆசைப்பட்டதை சாப்பிடட்டும் என பாக்கெட் மணி தருவது சிலரின் வழக்கம். இது ஒரு மோசமான செயல். இதுபோலவே, கணவன் மனைவி இருவருமே வேலைக்குப் போகிறோம் கவனிக்க ஆளில்லை. குழந்தையோடு வேலிட் ஹவரை செலவு செய்ய இயலவில்லை. குறைந்தபட்சம் அவன்/அவள் கேட்டதையாவது வாங்கித் தருவோம் என்று நினைப்பது இது மிகவும் தவறு. சிறுவர் சிறுமியர்களிடம் எக்காரணத்தை முன்னிட்டும் காசைத் தராதீர்கள். அது போலவே கண்டதையும் வாங்கிக்கொடுக்கவும் செய்யாதீர்கள். அவர்களுக்கு எது அவசியமோ அதை மட்டுமே வழங்குங்கள். அன்பு செய்வது, அக்கறை காட்டுவது என்பது வேறு. அதற்கும் காசுக்கும் தொடர்பில்லை. நீங்கள் அவர்களுக்குத் தர வேண்டியது எல்லாம் உங்களின் பொன்னான நேரத்தின் அழகான சில மணித்துளிகளைத்தான். அந்தத் தருணத்தில் எல்லா வேலைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு உணர்வுப்பூர்வமாய் அவர்களோடு இருங்கள்.

கலீல் ஜிப்ரானின் புகழ்பெற்ற கவிதை வரி ஒன்றுண்டு. உங்கள் குழந்தைகள் என்பவர்கள் உங்கள் குழந்தைகள் அல்ல; அவர்கள் முடிவற்ற வாழ்வின் தொடர்ச்சிகள். அவர்கள் உங்கள் மூலமாக இவ்வுலகுக்கு வந்தவர்களே அன்றியும் உங்களுக்காக இவ்வுலகுக்கு வந்தவர்கள் அல்ல. உங்களுடன் அவர்கள் இருந்தாலும் அவர்கள் உங்களுடையவர்கள் அல்ல. உங்கள் அன்பை அவர்களுக்குக் கொடுங்கள். உங்கள் எண்ணங்களை, விருப்பங்களை அல்ல… என்று அந்த மகாகவி குழந்தைகள் பற்றி சொன்னவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெற்றோரும் அறிய வேண்டியவை. ஒரு காட்டுப் பூ தன்னியல்பாய் பூப்பது போல் அவர்கள் வாழ்வு அழகாகவே மலரும். பக்க பலமாய் உடனிருந்து பார்த்து ஆனந்தமடையுங்கள் அதுவே அழகான வாழ்க்கையின் அர்த்தம்.

- என்.யுவதி



Tags : Children, broiler chickens, over parenting, adultery
× RELATED 23,179 முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாம் துவக்கம்