மூளையை எப்படி யூஸ் பண்ணுறது?

நவீன வாழ்க்கையால் மன அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், அதனை நீக்க பல்வேறு வழிமுறைகளையும் கண்டறிந்து வருகிறார்கள் விஞ்ஞானிகள். நம்முடைய இன்றைய மன அழுத்தத்துக்கு இடது பக்க மூளையை அதிகம் பயன்படுத்துவதே காரணம் என்றும், வலது பக்க மூளையினைப் பயன்படுத்தும்போது அமைதியுடன் ஆற்றலும் கிடைக்கும் என்றும் பரிந்துரைக்கிறார்கள். மன அழுத்தமாக இருக்கும் நேரங்களில், இடது மூளையின் அதிகபட்ச திறனை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்ற சமிக்ஞையை மூளை உங்களுக்கு சொல்லிவிடும். அதாவது நாம் 85 சதவீத நேரத்தை இடது மூளையின் பயன்பாட்டை செயல்படுத்துகிறோம்.ஒரு விஷயத்தை புரிந்துகொள்வது, தொடர்ச்சியான சிந்தனையில் ஈடுபடுவது, மொழி மற்றும் அதன் பொருள் பாகுபாடு, தகவல்களை புரிந்துகொள்ள மற்றும் நம்மைச் சுற்றிலிருந்தும் கிடைக்கக்கூடிய புதுப்புது விஷயங்களை கிரகித்துக் கொள்ள என எல்லாவற்றுக்கும் இடது பக்க மூளையைத்தான் பயன்படுத்துகிறோம்.

இவையெல்லாம் வாழ்வியல் செயல்பாட்டுக்கு முக்கியம்தான். ஆனால், அதற்கும் ஒரு வரம்பு இருக்கிறது. வரம்பு மீறிய அழுத்தத்தை இடது மூளைக்கு கொடுக்கும்போது, அவ்வப்போது வலது மூளையை பயன்படுத்துங்கள் என்ற சமிக்ஞை மூளையிலிருந்து நமக்கு கிடைக்கிறது. ஆனால், நாம்தான் அதை பொருட்படுத்துவதில்லை. வலது பக்க மூளையின் உபயோகத்தை அதிகரிப்பதுதான் இப்பிரச்னைக்கு தீர்வு. பிடித்த இசை கேட்பது, நகைச்சுவை நிகழ்ச்சிகள் பார்ப்பது, படம் வரைவது, நமக்குபிடித்த புத்தகம் படிப்பது இவை வலது மூளையை உபயோகிக்கும் வழிகள். இவையெல்லாம் எளிதில் செய்யக்கூடியவை. அப்படியே இடது பக்கத்திலிருந்து, வலதுபக்கத்திற்கு மாற்றி ரிலாக்ஸாகலாம்.

கீழ்க்கண்ட டிப்ஸ், உங்கள் வலதுபக்க மூளையை தூண்டுவதற்கு உதவலாம்.

*கலையை ரசியுங்கள் - ஏதோவொரு ஓவியக்கண்காட்சி, கலைப்பொருள் கண்காட்சி போன்றவற்றுக்கு செல்லலாம். அல்லது டக்கென்று ஹெட்செட் மாட்டிக்கொண்டு ‘பாட்டு’ கேட்கலாம்.

*ஃபேவரைட் நடிகரின் படத்துக்கு போகலாம். டிவியில் நகைச்சுவை காட்சிகளை போட்டு பார்க்கலாம்.

*உங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடலாம். கிரிக்கெட், டென்னிஸ் போன்று விளையாடும்போது உடலில் மகிழ்ச்சி ஹார்மோன் சுரந்து ஸ்ட்ரெஸ் ஓடிப் போய்விடும்.

*நண்பர்களோடு அல்லது உங்களுக்குப்பிடித்த நபர்களோடு வெளியே சென்றுவிட்டு வரலாம்.

*செல்லப் பிராணிகளோடு விளையாடி மகிழலாம். அதுவும் திரும்ப உங்களை கொஞ்சும்போது ஸ்ட்ரெஸ் போயே போச்சு…

*பிடித்தமான உணவை நீங்களே சமைக்க ஆரம்பிப்பதும் எளிமையான ஒரு வழி.

* ஏதாவது ஒரு புத்தகத்தைப் படிக்க ஆரம்பிக்கலாம். அது உங்களுக்குப்பிடித்த எழுத்தாளருடைய நாவலாக இருந்தால் இன்னும் சிறப்பு.

*சத்தமாக மியூசிக் போட்டுவிட்டு, ஆட ஆரம்பித்து விடுங்கள். இல்லை நீங்களே பாடிக்கொண்டும் ஆடலாம்.

*சந்தோஷமான எதிர்காலத்தை கற்பனை செய்து பாருங்கள். (இது ஒரு மேஜிக் மாதிரி பல மாயங்களை நிகழ்த்த வல்லது.) அப்படி கற்பனை செய்யும்போது வலது பக்க மூளையைத்தூண்டி, மூளையில் மகிழ்ச்சி ரசாயனங்கள் சுரக்க ஆரம்பிக்கும்.

*சட்டென்று வெளியே சென்று இயற்கையான சூழலை ரசிக்க ஆரம்பித்துவிடுங்கள்.

*குழந்தைகளோடு விளையாடுங்கள். நீங்களும் குழந்தை ஆகிவிடுவீர்கள்.

*வண்டியை எடுத்துக் கொண்டு ஒரு நீண்ட பயணம் செய்து விட்டு வந்தால் மனம் ரிலாக்ஸாகிவிடும்.

*இடது கையால் எழுத ஆரம்பியுங்கள். அது உங்கள் வலப்பக்க மூளை உபயோகத்தை தூண்டிவிடும்.

*விளையாட்டாக எதையாவது புது முயற்சி செய்யலாம்.எல்லாவற்றையும் விட, வலது, இடது மூளையை சமநிலையில் உபயோகிக்க வேண்டும் என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டு, மேலே சொன்ன டிப்ஸ்களை தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.

-உஷா நாராயணன்

Related Stories: