×

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதற்கு தடையாணை பெற முடியாத தமிழக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதற்கு தடையாணை பெற முடியாத தமிழக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுவதாவது; தமிழகத்தில் நதிநீர் உரிமைகள் அதிமுக ஆட்சியில் ஒவ்வொன்றாக பறிபோய் கொண்டிருக்கின்றன. பாலாற்றின் குறுக்கே 40 அடி உயரத்தில் 22 தடுப்பணைகளை ஆந்திர மாநில அரசு கட்டுவதை அதிமுக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. சட்டப்போராட்டத்தில் படுதோல்வியடைந்து நிற்கிறது அதிமுக அரசு.

தடுப்பணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்றுவரை பதில் இல்லை. 5 மாவட்டங்களை வறட்சிப் பிரதேசங்களாக மாற்றும் ஆபத்து நிறைந்தது இந்த தடுப்பணைகள். தடுப்பணைகள் கட்டப்படுவதால் வேலூர், தி.மலை உள்பட 5 மாவட்டங்களின் நீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும். பொதுப்பணித்துறையை வைத்திருக்கும் தமிழக முதல்வர் இதனை கண்டு கொள்ளாமல் இருப்பது கவலையளிக்கிறது. பாலாற்றில் ஆந்திர மாநில அரசு தடுப்பணைகள் கட்டும் பணியை உடனே தடுத்து நிறுத்தவேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பாலாறு வழக்கில் ஆந்திர அரசின் நடவடிக்கைக்கு எதிராக தடையுத்தரவு பெற்றிடவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Tags : Andhra Government, Blockade, Tamil Nadu Government, Stalin, Condemnation
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்