மதுரையில் வைகை நதியின் புனிதத்தை மீட்பதை வலியுறுத்தி வைகை பெருவிழா தொடக்கம்: 12 நாட்கள் நடைபெறும் என அறிவிப்பு

மதுரை: வைகை நதியின் புனிதத்தை காக்க வலியுறுத்தி மதுரையில் வைகை பெருவிழா தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த பெருவிழாவில் நாள்தோறும் பல்வேறு மாநாடுகள் நடத்தப்படவுள்ளன. மேலும் நதிகளில் தான் பிறந்தது நாகரிகம் அப்படி தமிழர் நாகரிகத்தின் தலை ஊற்று வைகை நதி ஆகும். தேனி மாவட்டம் வரசநாட்டில் உருவாகி ராமநாதபுரம் வரை 258 கிலோ. மீட்டர் தொலைவிற்கு பயணிக்கிறது வைகை நதி. இதை தொடர்ந்து மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளை பூர்த்தி செய்கிறது வைகை நதி. 5 ஆயிரம் ஆண்டுகள் பழமைக் கொண்ட வைகையின் தற்போதைய நிலை ரசிக்கும்படியாக இல்லை.

அதாவது கழிவுநீர் கலப்பு, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் நாளுக்கு நாள் மாசடைந்து வரும் வைகை நதியை தூய்மைப்படுத்தவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒரு பெரிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வைகை பெருவிழா 2019 என்கின்ற இந்த நிகழ்ச்சியை அகில பாரதிய சந்நியாசிகள் சங்க அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதை அடுத்து இன்று முதல் 12 நாட்கள் நடைபெறும் இந்த வைகை பெருவிழாவில் துறவியர் மாநாடு, சபரிமலை ஐயப்ப ஜீவ சமாஜ மாநாடு, பூசாரிகள் மாநாடு, சிவனடியார்கள் மாநாடு, பசு பாதுகாப்பு மாநாடு, முத்தமிழ் இளைஞர் மாநாடு, நதிநீர் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் மாநாடு, அனைத்து சமய சமுதாய மாநாடுகளின் ஒருங்கிணைப்பு மாநாடு உள்ளிட்டவை நடைபெறவுள்ளது.

மேலும் வைகைக்காக நடத்தப்படும் முதல் விழா என்பதால் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதை தொடர்ந்து மாலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் வைகையில் ஆரத்தி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கங்கை, காவிரி, கோதாவரி போன்ற 7 நதிகளின் புண்ணிய தீர்த்த கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற விழாக்கள் மூலம் நதி மாசுபாடு தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தலாம் என்றும், இழந்த புனித தன்மையை மீட்க இது போன்ற விழாக்கள் மிகமிக அவசியம் என்று விழா ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

Related Stories: