குன்னூர், கோத்தகிரியில் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகம் முற்றுகை

குன்னூர்: முறையாக குடிநீர் விநியோகிப்படாதததை கண்டித்து குன்னூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னுார் நகரில் மட்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய அணையான ரேலியா அணை இருந்து வருகிறது. 43.5 அடி கொள்ளளவு கொண்ட அணையில் போதிய மழை இல்லாததால் வறண்டு காணப்படுகிறது. தற்போது இந்த அணையில் 13 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால், 15 நாட்கள் முதல் 20 நாட்கள் வரை சுழற்சி அடிப்படையில், நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதன் பின்னர் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

இதனால், மக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் குன்னூர் நகராட்சிக்குட்பட்ட ஆஸ்பத்திரி லைன் எட்டாவது மற்றும் ஒன்பதாவது வார்டு பகுதி மக்களுக்கு கடந்த 27 தினங்களாக நகராட்சி சார்பில் குடிநீர் வினியோகிக்காததால் அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் அறையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற போலீசார் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். பின் தண்ணீர் விநியோகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி ஆணையாளர் தெரிவித்ததால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கோத்தகிரி: கோத்தகிரி அருகேயுள்ள அண்ணா நகர் பகுதியில் சுமார் 60 குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு பெத்தளா பகுதியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அண்ணா நகர் செங்குத்தான மலைப் பகுதியில் அமைந்துள்ளால், அங்கு குடிநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், இவர்களுக்கு முறையாக குடிநீர் கிடைப்பதில்லை. இதை தொடர்ந்து எம்எல்ஏ., நிதியின் கீழ் அண்ணா நகர் பகுதியில் ரூ.15 லட்சத்தில் கிணறு அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

இப்பணிகள் முடியாத நிலையில், பெத்தளா பகுதியில் இருந்து இப்பகுதி மக்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் நாள் தோறும் வருவதில்லை. இதனால், இப்பகுதி மக்கள் வெகு தூரம் சென்று ஊற்றுக்களில் இருந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அப்பகுதி மக்கள் நேற்று முற்றுகையிட்டனர். தொடர்ந்து, அங்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின் சம்பவ இடத்திற்கு சென்ற ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பொதுமக்களை சமாதானம் செய்தனர். மேலும், உடனடியாக அண்ணா நகர் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர். இதையடுத்து அண்ணா நகர் பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: