சங்க தலைவர் மீது அரசு நடவடிக்கை கண்டித்து 10 ஒன்றிய அலுவலகங்களில் ஊரகவளர்ச்சிதுறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் உள்ளிருப்பு போராட்டம் காரணமாக அரசு பணிகள் பாதிக்கப்பட்டன. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவராக இருந்து வந்த சுப்பிரமணியன் என்பவர் பணி ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், அவரது பணி நீக்க உத்தரவை ரத்து செய்யக் கோரியும் நேற்று மாநிலம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரில் வட்டத்தலைவர் பாஸ்கர் தலைமையிலும், நன்னிலத்தில் வினோத்ராஜ் தலைமையிலும், குடவாசலில மாவட்ட பொருளாளர் சுந்தரலிங்கம் தலைமையிலும், கொரடாச்சேரியில் மாவட்ட தலைவர் வசந்தன், செயலாளர் செந்தில் ஆகியோர் தலைமையிலும் என மாவட்டம் முழுவதும் உள்ள 10 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் உட்பட பல்வேறு அலுவலகங்களில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டம் காரணமாக அரசின் வீடு கட்டும் திட்டம், 100 நாள் வேலைத் திட்டம் மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் உட்பட அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டன.

மன்னார்குடி : மன்னார்குடி மற்றும் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலகர்கள் சங்கத்தின் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முதல் ஊராட்சி செயலாளர்கள் வரை அனைத்து நிலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று ஒரு நாள் அலுவலகத்திற்கு வந்து பணிகளை புறக்கணித்து அலுவலகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட இணை செயலாளர்கள் ராஜேந்திரன், மோகன் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். ஊழியர் களின் போராட்டம் காரணமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வழக்க மாக நடைபெறும் அனைத்து விதமான பணிகளும் பாதிக்கப்பட்டு யூனியன் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் பல்வேறு பணிகளுக்காக அலுவலகங்களுக்கு வந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் சங்க வட்டார தலைவர் ரவிச்சந்திரன், வட்டார செயலாளர் லெனின், உட்பட அனைத்து பணியாளர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதலவர், தலைமைச்செயலாளர் மற்றும் அதிகாரிகள், விருதுநகர் கலெக்டர் ஆகியோருக்கு மனு அனுப்ப பணியாளர்களிடம் கையெழுத்து இயக்கமும் நடத்தினர். இதனால் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி கிடந்தன. மேலும் பல்வேறு பணிகளுக்காக அலுவலகத்திற்கு வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர். திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் செய்து கையெழுத்து போடும் போராட்டத்தில் சங்க நிர்வாகி கீர்த்திவாசன் தலைமையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் ஈடுபட்டனர். நீடாமங்கலம் ஒன்றியஅலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: