திருப்புத்தூரில் 50 ஆண்டுக்குபின் தூர்வாரப்படும் ஊரணி

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அச்சுக்கட்டு பகுதியில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஊரணி தூர்வாரப்பட்டது. திருப்புத்தூர் அச்சுக்கட்டு பகுதியில் அமைந்துள்ள ஷேக்இமாம் ரிஷால்தார் ஊரணி மிகவும் பழமை வாய்ந்ததாகும். பெரிய கண்மாய்க்கு அருகில் அமைந்துள்ள இந்த ஊரணி கண்மாயில் நீர்வரத்து அதிகமாகும் போது முதலில் நீர் நிரம்பும் ஊரணியாக திகழ்ந்தது. அதனைச் சுற்றியுள்ள வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு விவசாயம் தளைத்திருந்தது.

பின்னர் விவசாயம் குன்றி வீட்டுமனைகள் ஆனதால் ஊரணி பராமரிப்பு கைவிடப்பட்டது. தற்போது அங்குள்ள ஷேக்இமாம் ரிஷால்தார் தர்ஹாவின் தலைவர் அல்லாபாக்ஸ், பாபா அமீர்பாதுஷா ஆகியோர் வட்டாட்சியரிடம் முறையிட்டதன் பேரில், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு தற்போது 50 ஆண்டுகளுக்குப் பிறகு பொக்லைன் இயந்திரம் மூலம் ஊரணி முழுவதும் மண்டியிருந்த கருவேல மரங்களை அகற்றி தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது அங்கு தூர்வாரும் பணியினை திருப்புத்தூர் தாசில்தார் தங்கமணி தலைமையிலான வருவாய்த் துறையினர், தர்ஹா நிர்வாகிகள் அமீன், அபுதாகிர், அப்துல்காதர் ஆகியோர் பார்வையிட்டனர். மீண்டும் ஊரணி அங்கு அமையவிருப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: