×

ஆண்டிபட்டியில் அ.தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கை விசாரிக்க 3 தனிப்படை அமைப்பு

ஆண்டிப்பட்டி: ஆண்டிபட்டியில் அ.தி.மு.க ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் சதீஷ் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க, கூடுதல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் சந்தேகபடும் 3 நபர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் அ.தி.மு.க. ஆண்டிபட்டி ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளராக இருந்தவர் சதீஷ்(24) கொடூரமான முறையில் எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆண்டிபட்டி போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். கொலை நடந்த இடத்திற்கு வந்த தேனி மாவட்ட எஸ்பி.பாஸ்கரன், இந்த வழக்கை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தேனி மாவட்ட கூடுதல் துணை கண்காணிப்பாளர் மோகன்ராஜ் தலைமையில் சதீஷ் கொலை வழக்கை விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். முதற்கட்டமாக சதீஷ் இறந்து கிடந்த இடத்தில் இருந்து 50 அடி ஆழத்தில் இருந்த கிணற்றில் தடயங்கள் எதுவும் உள்ளதா? என்று கண்டறியும் வகையில் ஆண்டிபட்டி தீயணைப்புத்துறையினர் உதவியுடன் கிணற்றில் இறங்கி ஆய்வு நடத்தினர். ஆனால் கிணற்றில் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

சதீஷ் தோட்டம் அமைந்துள்ள பகுதி ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி என்பதால், அந்த பகுதியில் புதிதாக நபர்கள் யாரும் வந்து சென்றார்களா? என்பது குறித்து, அப்பகுதியை சேர்ந்தமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதவிர இறந்த சதீஷ் என்பவரின் செல்போனை கைப்பற்றிய போலீசார், அதில் வந்திருந்த அழைப்புகள், சதீஷ் அடிக்கடி தொடர்பு கொண்ட நபர்கள் என அழைப்புகளை கொண்டு சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் 3 நபர்களை ஆண்டிபட்டி போலீசார் தனித்தனியாக அழைத்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை நடைபெற்ற விசாரணையில் இந்த வழக்கில் துப்பு எதுவும் கிடைக்கவில்லை என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. அதே நேரம் கொலை நடந்த இரவில் இறந்த சதீஷ் மதுரையில் இருந்து காரில் வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் வந்த வழியில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் ஒரிரு நாட்களில் இந்த வழக்கில் நடந்தது என்ன? என்பது குறித்து விரிவாக தெரிந்துவிடும் என்று இந்த வழக்கை விசாரிக்கும் போலீசார் தெரிவித்தனர்.


Tags : Andipatti, murder
× RELATED தொற்று நோயால் இறந்தவர்களின் இறப்பு...