×

தாழையூத்து - தச்சநல்லூர் சாலை விரிவாக்கம்... தடுப்புகள் அமைக்காததால் விபத்து அபாயம்

நெல்லை: நெல்லை தாழையூத்தில் இருந்து தச்சநல்லூர் வரையிலான சாலை விரிவாக்கப்பணி முடிவடைந்தபோதும் சாலையின் நடுவே தடுப்பு அமைக்கப்படாததால் விபத்து அபாயம் நிலவுகிறது. நெல்லை மாநகர பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சில சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்படுகின்றன. இந்த திட்டத்தில் தச்சநல்லூரில் இருந்து தாழையூத்து வரையிலும் பாளை மத்திய சிறையில் இருந்து டக்கரம்மாள்புரம் பாலம் இணையும் இடம் வரையிலும் நான்குவழிச்சாலைகளாக மற்றும் பணி தற்போது மும்முரமாக நடக்கிறது. சாலைகள் விரிவாக்கப் பணிகள் ஓரளவு நிறைவு பெற்றுவிட்டது. இந்த பகுதிகளில் உள்ள சிறிய பாலங்கள், கல்வெட்டு பாலங்கள் அகலப்படுத்தும் பணி தற்போது நடக்கிறது. சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு தார் தளமும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்கள் வேகமாக செல்கின்றன.

அதே நேரத்தில் மையப்பகுதியில் சாலையில் பிரிக்கும் தடுப்புச் சுவர்கள் இன்னும் அமைக்கப்படவில்லை. இதற்காக ஓடை போல் பள்ளம் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் முந்திச்செல்லும் வாகனங்கள் இந்த பள்ளத்தில் சரிந்து தடுமாறி விபத்துக்கு உள்ளாகும் அபாயம் நிலவுகிறது. குறிப்பாக சாலைகளில் மின்விளக்கு வசதியில்லாத பகுதிகளில் சாலையில் மையப்பகுதியில் உள்ள பள்ளம் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. எனவே மையப்பகுதி தடுப்புகளை உடனடியாக அமைக்க வேண்டும் என வாகனஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை வட்டாரத்தினர் கூறுகையில், ‘‘மையப்பகுதியில் தடுப்பு அமைக்கும் பணி டக்கரம்மாள்புரம் பகுதியில் இருந்து துவங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடங்களில் இடைவெளி விட்டு நிரந்தர தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. விரிவாக்கம் செய்யப்பட்ட சாலை முழுவதும் இதற்கான பணிகள் விரைவில் செய்து முடிக்கப்படும்’’ என்றனர்.

Tags : Accident, risk
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு பஸ்களில் ஆர்டிஒ., ஆய்வு