நவமலை குடியிருப்பில் மீண்டும் ஒற்றை காட்டுயானை அட்டகாசம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த நவமலையில் உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பில், மீண்டும் ஒற்றை காட்டு யானை புகுந்து அட்டகாசம் செய்தது. அதை விரட்டியபின், வனக்குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே உள்ள நவமலையில் மலைவாழ் மக்கள் வசிக்கும் குடியிருப்பு உள்ளது. இங்கு 40க்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளாக வசிக்கின்றனர். இந்த பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் உலா வருகிறது. கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வந்த ஒற்றை காட்டு யானை, ரஞ்சனி என்ற சிறுமியையும், மாகாளி என்ற தொழிலாளியையும் தாக்கி கொன்றது. இதையடுத்து ஒற்றை காட்டு யானையை, கும்கியாகைள் உதவியுடன் வனத்துறையினர் விரட்டினர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில், நவமலையில் உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பில், அந்த ஒற்றை யானை மீண்டும் புகுந்தது.

யானை அருகே வருவதையறிந்த காளியப்பன் என்பவர், வீட்டிலிருந்து வெளியேறி உயிர் தப்பினார். அந்த குடிசையை யானை துவம்சம் செய்து, அங்கிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களையும் வீசி எரிந்தது. அதேபோல், சில மாதத்திற்கு முன்பு இறந்த மாகாளி என்பவரின் வீட்டையும் துவம்சம் செய்தது. அந்நேரத்தில் மாகாளியின் மனைவி ஏசம்மா என்பவர் வீட்டில் இல்லை. இதையடுத்து அப்பகுதியில் வசித்தவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த வனச்சரகர் காசிலிங்கம் மற்றும் வன ஊழியர்கள், நவமலை குடியிருப்பு பகுதியை சுற்றி வந்த ஒற்றை காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அந்நேரத்தில் ஜீப்பில் சென்ற வனத்துறையினரை அந்த யானை துரத்தியது. பதறிய வனத்துறையினர், ஜீப்பை பின்னோக்கி இயக்கினர். இருப்பினும் அந்த யானை, வனத்துறையினரின் ஜீப்பை நோக்கி விரட்டிபடி வந்தது.

ஒருகட்டத்தில் டிரைவர் வேகமாக இயக்கி ஜீப்பை வேறு பகுதியில் ஓட்டி சென்றார். அந்த யானையும் சிறுதூரம் வரை ஓடிவந்து, பின் காட்டிற்குள் தானாக சென்றது. இதையடுத்து நேற்று காலை, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து சம்பவ இடத்துக்கு சென்று, யானை நடமாட்டம் குறித்து விசாரித்தார். அப்போது அங்கிருந்த மலைவாழ் மக்கள், அடிக்கடி யானை புகுகிறது. எங்களுக்கு அடிப்படை வசதி மட்டுமின்றி யானைகளிடம் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதையடுத்து, தற்காலிகமாக நவமலையின் ஒரு பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலர் குடியிருப்பில், மலைவாழ் மக்களை தங்க வைக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். நவமலை பகுதியில் மீண்டும் காட்டு யானை புகுவதை தடுக்க 12 பேர் கொண்ட குழுவினர் பகல், இரவு என தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே, நவமலை வனப்பகுதியில் இருவரை காவு வாங்கிய ஒற்றை காட்டு யானை, மீண்டும் புகுந்ததால், மலைவாழ் மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: