ரெட்டியார்சத்திரம் போடம்பட்டியில் தொடரும் ‘திறந்தவெளியால்’ பரவும் தொற்றுநோய்

செம்பட்டி: ரெட்டியார்த்திரம் அருகே போடம்பட்டியில் தனிநபர் கழிப்பறை இல்லாததால் திறந்தவெளி கழிப்பிடம் தொடர்கதையாக உள்ளது. இதனால் பொதுமக்கள் தொற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், தருமத்துப்பட்டி ஊராட்சிக்குட்பட்டது போடம்பட்டி. இங்கு சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவ்வூரில் சுகாதாரம் உள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அந்தளவிற்கு கிராமமே சுகாதார சீர்கேடுகளின் பிடியில் சிக்கி தவிக்கிறது. இங்கு மகளிருக்காக கட்டப்பட்ட சுகாதார வளாகம் 14வது நிதிக்குழு மானியம் 2017-18 நிதி சுமார் ரூ.80 ஆயிரம் செலவில் புதுப்பித்தும் திறக்காமல் மூடி வைத்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் சார்பில் தனிநபர் கழிப்பறை கட்ட ரூ.100 வாங்கி கொண்டு போட்டோ எடுத்து சென்றனர். ஆனால் இதுவரை தனிநபர் கழிப்பறை கட்டித்தரவில்லை.

இதன் காரணமாக இப்பகுதி ஆண்கள், பெண்கள் செவனக்கரையான்பட்டி செல்லும் சாலையை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நோய்கள் பரவி தினந்தோறும் சிகிச்சைக்காக கன்னிவாடி அரசு மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளது. பூங்காநகரில் உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து பல ஆண்டுகளாகி விட்டது. இதனால் சுகாதாரமற்ற முறையில் தண்ணீர் விநியோகிக்கப்படுவதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

சமூகஆர்வலர்கள் கூறுகையில், ‘தூய்மை இந்தியாவை உருவாக்கும் திட்டமான தனிநபர் கழிப்பறை போடம்பட்டியில் மட்டும் இதுவரை வருவதற்கான அறிகுறியே இல்லாமல் இருப்பது வேதனை அளிப்பதுடன் ஊராட்சி நிர்வாகத்தின் மெத்தன போக்கையே காட்டுகிறது. இப்பகுதியில் சுகாதார வளாகம் இல்லாததால் திறந்தவெளி கழிப்பிடம் தொடர்கதையாகி பொதுமக்களுக்கு பலவித நோய்கள் பரவி வருகின்றன. பூங்காநகரில் உள்ள சுத்தம் செய்யாத தொட்டியிலிருந்து விநியோகிக்கும் தண்ணீராலும் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. எனவே மாவட்ட கலெக்டர் தருமத்துபட்டி ஊராட்சியில் தனிநபர் கழிப்பறை திட்டத்தை செயல்படுத்துவதுடன், தண்ணீர் தொட்டியையும் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: