திருச்சுழியில் 8 ஆண்டாக திறக்கப்படாத சுற்றுலாப் பயணிகள் விடுதி

திருச்சுழி: திருச்சுழியில் சுற்றுலாப் பயணிகளின் விடுதி பயன்பாட்டுக்கு வராமல், சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இந்த விடுதியில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி, பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சுழியில் ஆயிரம் ஆண்டு பழமையான துணைமாலையம்மன் சமேத திருமேனிநாதர் திருக்கோயில் மற்றும் ரமணர் பிறந்த இடம் உள்ளது. இதனால், திருச்சுழி சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டது. திருமேனிநாதர் கோயிலுக்கு வெளி மாநிலத்தினரும், சுற்றுலாப் பயணிகளும் அதிகமாக வந்து சென்றனர். இவர்கள் தங்குவதற்கு, நகரில் போதுமான இடவசதி இல்லாததால், இங்கு தங்குவதை தவிர்த்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 2011ல் தமிழ்நாடு சுற்றுலாத்துறை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 9 லட்சம் ரூபாயில், கோவில் முன்பாக சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக 8 அறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால், இக்கட்டிடத்தில் எந்த வசதியும் இல்லாமல் இருப்பதால், இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. மேலும், சிதிலமடைந்து வருகிறது. தற்போது இரவு நேரங்களில் கட்டிடத்தில் சமூகவிரோதச் செயல்கள் நடந்து வருவதாக, சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர். மேலும், இரவு நேர பார் ஆக மாறி வருகிறது. கோயில் மற்றும் ரமணர் பிறந்த இடத்தை பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் அருப்புக்கோட்டை மற்றும் மானாமதுரையில் தங்குகின்றனர். தங்கும் வசதி இல்லாததால், ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இது குறித்து சுற்றுலாப் பயணிகள் சிலர் கூறுகையில், ‘ ராமேஸ்வரம், ரமணர் மகரிஷி பிறந்த ஊரான திருச்சுழிக்கு ஆண்டுதோறும் வருகிறோம். இங்கு தங்கும் வசதியில்லை. இதனால், அருப்புக்கோட்டையில் தங்குகிறோம். சுற்றுலாப் பயணிகளுக்காக கட்டப்பட்ட கட்டிடத்தில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி, பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்’ என்றனர்.

Related Stories: