அமேசான் காடுகளில் வாழும் வெளியுலகத் தொடர்பில்லாத ஆவா இன பழங்குடியினர்...விரைவில் அழியும் அபாயம்

பிரேசிலியா: அமேசான் காடுகளில் வாழும் வெளியுலகத் தொடர்பில்லாத ஆவா இனத்தை சேர்ந்த ஆதிவாசி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த இனத்தை சேர்ந்த மக்கள் அழியும் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரேசில் நாட்டின் அமேசான் மழைக்காடுகளில் மாரன்ஹாவோ ((Maranhao)) என்ற இடத்தில் ஆவா இனத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். பலநூறு ஆண்டுகளாக வெளியுலகின் தொடர்பில் இல்லாமல் தனித்து வாழ்ந்து வரும் இவர்கள், பல்வேறு விதமான வேட்டையாடும் திறன் மூலமே இன்னும் உயிர் வாழ்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஹெலிகாப்டரில் சென்ற ஆய்வாளர்கள் இந்த இன மக்களை வீடியோ எடுத்தனர். அப்போது அவர்கள் வில் அம்புகளால் தாக்கியுள்ளனர். அந்த வீடியோவை நேஷனல் ஜியோகிராபிக் சேனல் வெளியிட்டது.

இந்நிலையில் தற்போது ஆவா பழங்குடியினத்தவர் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் அரசு சாரா அமைப்பு ஒன்று ஆவா இனத்தைச் சேர்ந்த ஒருவரின் அரிதான வீடியோவை வெளியிட்டுள்ளது. மேலும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் அவர்கள் இருப்பதால் விரைவிலேயே அந்த இனம் அழிந்து போகும் அபாயம் இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இது போன்று பல்வேறு விதமான பழங்குடியினர் அந்த பகுதியில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

Related Stories: