×

மீண்டும் மும்பையில் இன்று காலை முதல் கனமழை: போக்குவரத்து பாதிப்பு

மகாராஷ்ட்டிரா: மீண்டும் மும்பையில் இன்று காலை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் சாலைகள், தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மும்பை, தானே, பால்கர், ராய்கட் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விடாது பெய்த கனமழை காரணமாக ஏராளமான இடங்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை முதல் மும்பையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, சயான், அந்தேரி உள்ளிட்ட பகுதிகளிலும், தானே உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. முழங்கால் அளவு நீரில் நடந்து செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வாகனங்களும் நகர முடியாமல் ஆங்காங்கே நீரில் சிக்கிக் கொள்கின்றன. அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. அந்தேரி மேம்பாலத்தில் மழையால் காட்சி மறைந்து மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாகின. இதில் பத்து பேர் படுகாயம் அடைந்தனர்.

கனமழையால் சாலை போக்குவரத்து மட்டுமின்றி ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. ரயில் தண்டவாளங்களிலும் மழை நீர் தேங்கியிருப்பதால் மின்சார ரயில்கள் மெதுவாக நகர்கின்றன. மழையால் மும்பை நகரின் இயல்பு வாழ்க்கை மீண்டும் முடங்கியுள்ளது.

Tags : Mumbai, heavy rain, traffic, impact
× RELATED வருசநாடு பகுதியில் பாலிதீன்,...