×

பில்டர்களுக்கு புது தலைவலி பிளாட்களை விற்க கவர்ச்சி திட்டத்துக்கு தடை

புதுடெல்லி: பிளாட்களை விற்பனை செய்வதற்காக பில்டர்கள் கவர்ச்சி திட்டங்களை அமல்படுத்துவதற்கு தடை வருகிறது. இதனால் ரியல் எஸ்டேட் பிசினசுக்கு புதிய தலைவலி ஆரம்பித்துள்ளது. மாத தவணை கட்டுகிறோம், வட்டி கட்டுகிறோம் என்று கூறி கவர்ச்சி திட்டங்களை அறிவித்து விட்டு, வாடிக்கையாளர்களை ஏமாற்றும்  போக்கு அதிகரிப்பதாக மத்திய அரசின் தேசிய வீட்டு வசதி வங்கிக்கு புகார்கள்  வருகின்றன. இதை ஆராய்ந்த தேசிய வீட்டு வசதி வங்கி, தீவிரமாக பரிசீலித்து இதுபோன்ற கவர்ச்சி திட்டங்களை இனி அனுமதிக்க கூடாது  என்று முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வர உள்ளது. மாத தவணைத் தொகையில் வட்டி கட்டுகிறோம்; முதல் தவணை கட்டுகிறோம்  என்றெல்லாம், வாடிக்கையாளர்களை கவர ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் விளம்பரங்கள்  வெளியிடுகின்றன. கடந்த சில ஆண்டாக ரியல் எஸ்டேட் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 50 லட்சத்துக்கு மேல் உள்ள பல மாடிக்குடியிருப்புகளை விற்பனை செய்ய பல பில்டர்கள் திண்டாடி வருகின்றனர். ஒரு பக்கம் தேசிய வீட்டு வசதி வங்கியின் அங்கீகாரம்  பெற்று, கடன் வாங்கி பல மாடிக்குடியிருப்புகளை கட்டி விட்டு, அதனை விற்காமல் பல மாதங்கள் போட்டு வைப்பதால் அவர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க வாடிக்கையாளர்களுக்கு பல வித சலுகைகளை ெகாடுத்து பிளாட்களை விற்க வேண்டியிருக்கிறது.   

வாடிக்கையாளர்களும் இது போன்ற சலுகைகள் தரும் பில்டர்களிடம் தான் வாங்குகின்றனர். சில பில்டர்கள், பல மாடிக்குடியிருப்பு கட்ட ஆரம்பிக்கும் போதே, வாடிக்கையளர்களுக்கு மாத தவணையை ஒரு மாதம் கட்டுவதாக கூறி சலுகை தருகின்றனர். இன்னும் சிலர், வட்டித் தொகையை கட்டி விட முன்வருகின்றனர். இப்படி செய்வதால் சில முறைகேடுகள் நடக்கின்றன. பில்டர்கள் சிலர் தவறு செய்வதால் இதற்கு தடை விதிக்கலாம் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ‘ஏற்கனவே பல ஆயிரம் வீடுகள் விற்பனை ஆகாமல் உள்ளன. இந்த நிலையில் அரசு இப்படி கட்டுப்பாடுகளை விதித்தால் ரியல் எஸ்டேட் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும்’ என்று ரியல் எஸ்டேட் தரப்பினர் கவலை தெரிவித்தனர்.



Tags : Flats, sell, glamor project, ban
× RELATED வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை