நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் கணவர், பணிப்பெண் குத்திக்கொலை: பட்டப்பகலில் வீடு புகுந்து கொடூரம்

நெல்லை: நெல்லையில் வீடு புகுந்து திமுக முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, கணவர், பணிப்பெண் ஆகியோர் கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்டனர். நெல்லையில் பட்டப்பகலில் நடந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் குறித்த விபரம் வருமாறு: நெல்லை ரெட்டியார்பெட்டி ரோடு ரோஸ் நகரைச் சேர்ந்தவர் முருக சங்கரன் (70). நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி உமா மகேஸ்வரி (61). நெல்லை மாநகர் மாவட்ட திமுக மகளிரணி செயலாளரான இவர் கடந்த 1996 முதல் 2001 வரை நெல்லை மாநகராட்சியின் முதல் மேயராக இருந்தார். இவர்களது மகன் சரவணன். மகள்கள் கார்த்திகா, பிரியா. சரவணன் சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்து விட்டார்.
மகள் கார்த்திகா குமரி மாவட்டம்  ஆரல்வாய்மொழியில் உள்ள அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

இவரது கணவர் நெல்லை பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இன்ஜினீயராக உள்ளார். இவர்களது வீடு உமாமகேஸ்வரி வீட்டின் அருகே உள்ளது. 2வது மகள் பிரியா திருச்சியில் கணவருடன் வசிக்கிறார்.நேற்று வீட்டில் உமாமகேஸ்வரி, கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரி ஆகியோர் இருந்தனர். மாலை 5 மணியளவில் மகள் கார்த்திகா வேலை முடித்து வீட்டிற்கு வந்தார். பின்னர் பெற்றோரை பார்ப்பதற்காக அருகில் உள்ள வீட்டிற்கு சென்ற போது தாய், தந்தை, பணிப்பெண் மூவரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு கணவர் மற்றும் அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன், துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர் கோடிலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. அது மேலப்பாளையம் ரோட்டை நோக்கி ஓடியது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கொலை நடந்த வீடு முழுவதும் ரத்தம் சிதறி உறைந்து காணப்பட்டது. கொலையாளிகள் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது. உமாமகேஸ்வரி முன் அறையிலும், கணவர் மற்றொரு அறையிலும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். பணிப்பெண் மாரி சமையலறையில் பிணமாக கிடந்தார்.கொலையாளிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக அவர்கள் முயற்சி செய்திருக்கலாம் என்றும், முருகசங்கரன் மற்றொரு அறைக்கு சென்று கதவை பூட்ட முயன்ற போது கொலையாளிகள் விரட்டிச் சென்று குத்திக் கொலை செய்திருக்கலாம் என்றும் தெரிகிறது. கொலையாளிகள் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

உமாமகேஸ்வரி, கணவர் உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் காட்டுத்தீபோல் பரவியது. இதையடுத்து திமுக மற்றும் அனைத்துக்கட்சி பிரமுகர்கள் உறவினர்கள் உள்ளிட்ேடார் வீட்டு முன் திரண்டனர். கொலை நடந்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. கொலையாளிகள் வீட்டில் இருந்த நகை, பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர். எனவே நகைக்காக கொலை நடந்ததா அல்லது ஏற்கனவே குடும்பத்திற்குள் இருந்த முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
உமாமகேஸ்வரி வீடு காம்பவுண்ட் சுவருடன் கூடியது. முன்பக்கம் பெரிய கேட் உள்ளது. அது எப்போதும் பூட்டியே இருக்கும். எனவே எளிதில் யாரும் உள்ளே செல்ல முடியாது. எனவே கொலையாளிகள் சுவர் ஏறி குதித்து தான் உள்ளே சென்றிருக்க கூடும் என்று தெரிகிறது. இதுதொடர்பாக மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.Tags : Mayor's husband, maid, piercing, cruelty
× RELATED விமானம் புறப்பட தாமதம் பணிப் பெண்களிடம் பயணிகள் சண்டை