×

நிலவில் தண்ணீர் இருந்தால் எங்களுக்கு தகவல் சொல்லுங்கள்: சென்னை குடிநீர் வாரிய டிவிட்டர் பதிவால் சர்ச்சை

சென்னை: சந்திரயான்-2 விண்கலத்தை நிலவில் செலுத்திய இஸ்ரோவுக்கு பாராட்டு தெரிவித்த சென்னை குடிநீர் வாரியம், நிலவில் தண்ணீர் இருந்தால் தங்களுக்கு முதலில் தெரியப்படுத்தவும் என்று கிண்டல் செய்து டிவிட் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தை இந்த ஆண்டு சென்னை சந்தித்தது. எங்கு பார்த்தாலும் காலி குடங்களுடன் தண்ணீருக்காக மக்கள் தவித்த தவிப்பு இந்திய அளவில் எதிரொலித்தது. மாற்று வழிகள் மூலம் சமாளித்த விடலாம் என்று கணக்கு போட்ட சென்னை குடிநீர் வாரியம் பெரும் ஏமாற்றத்தை தான் சந்தித்தது. அந்த அளவுக்கு அனைத்து வழிகளும் அடைத்ததால் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் மக்களுக்கும், அரசுக்கும் பதில் சொல்ல முடியாமல் தவியாய் தவித்தனர்.

கல்குவாரிகளிலும் தண்ணீர் வறண்டு போன நிலையில், தற்போது தான் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. அவ்வப்போது மழை பெய்தாலும் கூட இன்னும் தண்ணீர் பஞ்சம் முடிவுக்கு வந்தபாடில்லை. இதனால் தண்ணீர் எங்கே கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தான் சென்னை மக்கள் உள்ளனர்.   
இந்நிலையில், நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் நேற்று முன்தினம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதை நாடே கொண்டாடி வருகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என பல்வேறு தரப்பினரும் இஸ்ரோவுக்கு வாழ்த்தை தெரிவித்தனர்.

ஆனால் சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்த வாழ்த்தை இஸ்ரோவால் மறக்கவே முடியாது. தற்போது தான் சென்னை குடிநீர் வாரியம் டிவிட்டர் அக்கவுண்ட்டை தொடங்கியுள்ளது. அதில் குடிநீர் வாரிய தகவல் பலவற்றை பதிவு செய்து வரும் நிலையில் நேற்று சந்திரயான்-2 நிலவுக்கு செல்வது குறித்த ஒரு பதிவை போட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பதிவில்,‘‘சந்திரயான்-2 விண்கலத்தை நிலவில் செலுத்தியமைக்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். நகரில் புதிய நீர் நிலைகளை அதிகரிக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். ஒரு வேளை நிலவில் தண்ணீரை கண்டறிந்தால், முதலில் யாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா?’’ என்று கூறப்பட்டுள்ளது.

பொது தளத்தில் சென்னை குடிநீர் வாரியம் இதுபோன்று பதிவை போட்டிருப்பது இஸ்ரோ நிர்வாகத்தை கிண்டல் செய்வதாக இருந்தாலும், சென்னை மக்களுக்கு தண்ணீரை பெற நிலவுக்கு தான் இனி செல்ல வேண்டும் என்பதை பட்டும் படாமலும் கிண்டலாக வெளிப்படுத்தியுள்ளனர். இந்த பதிவு பொதுமக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.



Tags : Chennai, Drinking Water Board, Twitter, Registry, Controversy
× RELATED திருப்புத்தூர் அருகே கண்மாய்...