×

மக்களை அதிகம் பணம் கட்ட வைக்கும் தந்திரம்: 501 யூனிட் கடந்த பிறகு வீட்டுக்கு வந்து மின் கட்டணம் கணக்கெடுப்பு

* தாமதம் மூலம் கட்டணக் கொள்ளையில் மறைமுகமாக ஈடுபடும் மின்வாரியம்

* ஆயிரக்கணக்கில் ‘பில்’ கட்ட முடியாமல் அவதி


சென்னை: தமிழக மின்வாரியத்தில் வருவாய் அதிகரிப்பை உறுதி செய்யும் வகையில் 501 யூனிட்டுக்கு மேல் வரும் வகையில் பெரும்பாலான பகுதிகளில் மின்கட்டணம் அளவீடு செய்யப்படுகிறது. இதனால் மின்கட்டண மானியத்தை விட பல ஆயிரம் ரூபாய் கூடுதல் பணத்தை மின்கட்டணமாக கட்ட வேண்டி உள்ளது. அதை காரணம் காட்டி அதிக மின்நுகர்வு என்று குறிப்பிட்டு மின்வாரியம் மக்களிடம் இருந்து கூடுதலாக டெபாசிட் ெதாகையும் பெருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் இத்தகைய குளறுபடிகளுக்கு மின்துறையின் உயரதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழகம் முழுவதும் 2 கோடிக்கும் மேலான வீட்டு மின் இணைப்புகள், 21 லட்சத்துக்கும் அதிகமான விவசாய மின் இணைப்புகள் உள்ளன. மேலும் 30 லட்சத்துக்கும் அதிகமான வணிகம் சார்ந்த மின் இணைப்புகளும் உள்ளன. இவற்றுக்கான மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் வழங்கி வருகிறது.
இவ்வாறு வழங்கப்பட்டுள்ள இணைப்புகளை அவ்வப்போது ஆய்வு செய்து கட்டணத்தை வசூல் செய்து வருகிறது. தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. 500 யூனிட் கீழ் மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக மின் வாரியத்திற்கு ஏற்படும் செலவு தொகையை, அரசு வழங்கி வருகிறது.

இந்த வீடு சார்ந்த மின் இணைப்புகளை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஊழியர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். அப்போது அங்குள்ள மீட்டரில் பதிவாகியிருக்கும் பயன்பாட்டு அளவை கணக்கீடு செய்ய வேண்டும். பிறகு அந்த விபரத்தை நுகர்வோரிடம் உள்ள மின்கணக்கீட்டு அட்டையில் எழுதிவிட்டு, அலுவலகம் வந்து கணினியில் பதிவு செய்ய வேண்டும். கணக்கு எடுத்ததில் இருந்து 20 தினங்களுக்குள், நுகர்வோர் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால் அபராதத்துடன் கட்டணம் செலுத்த நேரிடும். இந்நிலையில் சமீபகாலமாக ஊழியர்கள் வேண்டும் என்றே கணக்கெடுப்பில் தாமதம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வாய் மொழி உத்தரவா அல்லது மின் கணக்கெடுப்பு ஊழியர்கள் பற்றாக்குறையா என்று கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு மின்வாரிய உயரதிகாரிகள் தந்திரமாக செயல்படுகின்றனர். இதனால் மின் அளவு 501 யூனிட் கடந்த பிறகே பல இடங்களில் தாமதமாக வந்து மின் ஊழியர்கள் கணக்கெடுக்கின்றனர். இதனால் வெறும் 350, 500 ரூபாய் மின் கட்டணம் கட்டிக் கொண்டிருந்தவர்கள் இதன் மூலம் குறைந்தபட்சம் 110க்கு மேலும் சிலர் ₹ 2000 பலர் 3000 ரூபாய் என்ற அளவிலும் மின்கட்டணம் செலுத்த வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். திடீரென மின்கட்டணம் உயர்ந்த காரணத்தை அறியாமல் மக்கள் பணம் கட்டுமிடத்தில் கேள்வி கேட்டால் உரிய பதில் கிடைப்பதில்லை.

புகார் கொடுத்தால் பெயரளவுக்கு ‘செக்’ செய்துவிட்டு மீட்டர் என்றாக இருக்கிறது. நீங்க அதிகம் உபயோகப்படுத்தி இருப்பீர்கள் என்று அறிக்கை கொடுத்துவிட்டு சென்றுவிடுகின்றனர். ஆனால் மின்கணக்கை தாமதப்படுத்தி கட்டண உயர்வுக்கு காரணமாவர்களை பற்றி அறிக்கையில் புகார் தெரிவிப்பதில்லை. இந்த காரணத்தால் அதிக அளவு கணக்கெடுக்காததால் பொதுமக்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தொமுச நிர்வாகி சரவணன் கூறியதாவது:மின் கட்டணம் கணக்கெடுக்கும் பணியில் உள்ள பல ஊழியர்கள் வீடுகளுக்கு செல்லாமல் முந்தைய மின் பயன்பாட்டை வைத்து உத்தேசமாக கணினியில் பதிவு செய்கிறார்கள். அப்ேபாது நுகர்வோர் கடந்த மாதத்தைவிட குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தியிருந்தாலும், கூடுதலாக கட்டணத்தை செலுத்தும் நிலை ஏற்படுகிறது.

சமீபத்தில் சென்னையில் உள்ள குடிசைமாற்று வாரியத்தில் இதேபோன்ற நிலை ஏற்பட்டது. அப்போது அங்குள்ள மக்கள் மிகவும் அதிகமான தொகையை செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.இதேபோல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சம்மந்தப்பட்ட பிரச்னை நீடித்து வருகிறது. மின்வாரிய ஊழியர்களின் இத்தகைய அலட்சிய நடவடிக்கையால் நுகர்வோர்கள் அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் பகுதிகளில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் புகார் அளிக்கின்றனர்.நுகர்வோரிடம் சம்மந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கும் அதிகாரிகள், கூடுதல் மின் கட்டணத்தை கட்டாயம் செலுத்த வேண்டும் என்று சொல்கின்றனர். கட்டணம் கணினியில் ஏற்றப்பட்டு விட்டதால், எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகின்றனர்.

பணத்தை செலுத்தாவிட்டால், மின் இணைப்பை தொடர முடியாது என்றும் சொல்கின்றனர். இதனால் வேறு வழியில்லாமல் பொதுமக்கள் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.இதேபோல் ஒருசில இடங்களில் மின் கணக்கீடு செய்ய கால தாமதம் ஏற்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு முறையும் காலதாமதம் ஏற்படுவதால் மானியத்திற்குறிய மின் பயன்பாட்டு அளவு தாண்டி விடுகிறது. இதனால் மானியம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags : Electricity, bill, build, unable, avadhi
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...