×

தமிழகத்தில் மின்வெட்டு இல்லை: மின்சார வாரியம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மின்வாரியம் வௌியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தற்போதைய மின் தேவை சுமார் 1000 மெகாவாட் முதல் 1500 மெகாவாட் வரை குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் தற்போதைய சராசரி மின்தேவை சுமார் 13,900 மெகாவாட் முதல் 14,400 மெகாவாட் வரை உள்ளது.காற்றாலை மூலம் சுமார் 3000 மெகாவாட் முதல் 3500 மெகாவாட் வரை மின் உற்பத்தி பெறப்படுகிறது. வழக்கமாக காற்றாலை மின் உற்பத்தி பருவக்காலங்களில் அனல் மின் நிலையங்களில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு அலகுகள் நிறுத்தப்படுகிறது.

அதன்படி வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட 3வது அலகு கடந்த 12.7.2019 முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மேலும் வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் 2வது அலகு கடந்த 17.7.2019 அன்று கொதிகலன் குழாய் பழுதின் காரணமாக மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த பழுது சரி செய்யப்பட்டு 21.7.2019 இரவு முதல் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சொந்தமான 600 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை அனல் மின் நிலையத்தின் நிலை-2ன்  அலகு -1, மழை காரணமாக மின் தேவை குறைந்ததாலும் உற்பத்தியான பசுமை மின்னாற்றலை பயன்படுத்தும் பொருட்டு 19.7.2019, 11.50 மணி முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. எனவே, தமிழகத்தில் சென்னை உட்பட எந்த பகுதிக்கும் மின்வெட்டு என்பதற்கு இடமில்லை.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தின் பல பகுதிகளில் 4 முதல் 5 மணிநேரத்துக்கு ஒரு முறை 30 முதல் 1 மணிநேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. சில நேரங்களில் 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை மின்சாரம் நிறுத்தும் சம்பவங்கள் இன்றளவும் தொடர்ந்து கொண்டே உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.



Tags : Electricity, No, Electricity Board, Notice
× RELATED வீடியோ காலில் ஆபாசங்களை காட்டி...