அமித்ஷா சந்திப்பை தொடர்ந்து நிர்மலா சீதாராமனுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சந்தித்துப் பேசினார்.தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். பின்னர் திங்கட்கிழமை காலையில், பாஜ தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, பாஜ தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா உடனிருந்தார். தொடர்ந்து, டெல்லியில் முகாமிட்டிருந்த ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பாஜ தமிழக பொறுப்பாளர் பியூஸ் கோயல் ஆகியோரை சந்திக்க நேரம் கேட்டார். அதில் நிர்மலா சீதாராமன் மட்டும் நேரம் ஒதுக்கினார்.

அதைத் தொடர்ந்து, நேற்று காலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். அவர், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை விரைவாக ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டார்.

பின்னர் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘அமித்ஷாவை சந்தித்து பேசியது மரியாதை நிமித்தமானது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழகத்தின் நலனுக்காக நிதி தொடர்பாக சந்தித்து பேசினேன். அவரும் பல்வேறு ஆலோசனை, வழிமுறைகளை கூறியிருக்கிறார். மேலும் வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதியை கேட்டுள்ளேன், அதை கொடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

அதிமுகவில் பிரச்னையும் இல்லை, இதுகுறித்து அமித்ஷாவிடம் நான் எதையும் கூறவில்லை. குறைகூறும் குணமும் என்னிடம் அறவே இல்லை. வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் எங்களுடன் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் பிரசாரம் செய்வார்கள். பா.ஜ. தேசிய அளவிலான தலைவர்களும் பிரசாரம் செய்ய வருவார்கள் என நம்புகிறேன். மக்களுக்கு எதிரான எந்த திட்டமும் செயல்படுத்த மாட்டோம். உயர் மின்கோபுரம் அமைப்பது தொடர்பாக மாற்று வழியில் செயல்படுத்துவோம். மக்களுக்கு எதிரான எந்த திட்டமாக இருந்தாலும் அவர்களின் எதிர்ப்பு இருந்தால் அதை நிறைவேற்ற மாட்டோம். எட்டு வழிச்சாலையைப் பொறுத்தவரை உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டுமென்றால் இதுபோன்ற சாலை திட்டம் தேவை, மக்களுக்கு வளர்ச்சி தேவையா, இல்லையா.

அரசியல் பேசவே டெல்லி விஜயம்: பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை மாலையில் டெல்லி சென்று திங்கட்கிழமைதான் அமித்ஷாவை சந்தித்தார். அதன்பின்னர்தான் நிர்மலாவுடன் சந்திப்பு நடந்தது. இதற்காக அடுத்த நாள்தான், அதிகாரிகளை டெல்லிக்கு வரும்படி அழைத்துள்ளார். எனவே, அரசியல் பேசுவதற்காகவே அவர் டெல்லி சென்றுள்ளார். ஆனால் அதை அலுவலக பணிகளுடன் சேர்த்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதிமுகவில் உள்ள உள்கட்சி பூசல் மற்றும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் பாஜ தலைவர்கள் அழைப்பின் பேரிலேயே அவர் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் அவர் சென்ற தகவல் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியாது என்று கூறப்படுகிறது.

Related Stories: