×

வெற்றி பெற்ற எம்பி தேர்தலில் பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட வேலூரில் பலமடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்: மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: “நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்றது; அதைவிட, பலமடங்கு வாக்கு வித்தியாசத்தில் வேலூர் தொகுதியிலும் வெற்றி பெறுவோம்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் நேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டி:
என்னுடைய கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே, அடிக்கல் நாட்டப்பட்டிருக்கக்கூடிய பல நிகழ்ச்சிகளையொட்டி இன்றைக்கு திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன. அதேபோல், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டிருக்கின்றது. 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வீனஸ் நகர் பகுதியில் சட்டமன்றத் தொகுதியின் மேம்பாட்டு நிதியில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய ‘அங்கன்வாடி மையத்தை’ நான் திறந்து வைத்திருக்கின்றேன். அதேபோல் 69 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 97 ஆயிரம் புத்தகங்களுடன் மாநிலங்கள் அவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மேம்பாட்டு நிதியிலிருந்து புதியதாக கட்டப்பட்டிருக்கக்கூடிய  பெரியார் நகர் பகுதி  நூலகத்தினை திறந்துவைத்திருக்கின்றேன். அதேபோல், ஹரிதாஸ் நகர் பகுதியில் உள்ள தாமரைக் குளத்தை சீர்படுத்தி,  சுத்தப்படுத்தி, வெளிநாடுகளில் இருப்பது போல ஒரு அமைப்பை அங்கு உருவாக்கியிருக்கிறோம் என்று அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய மக்களே இன்றைக்கு மனம்திறந்து பாராட்டியிருக்கின்றார்கள்.

எனவே, அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 82 லட்ச ரூபாய் அதற்காக செலவு செய்யப்பட்டு இன்றைக்கு மக்களுடைய பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கின்றது. அதேபோல், 74 பேருக்கு கல்வி உதவித்தொகையை இன்றைக்கு வழங்கியிருக்கின்றோம். ‘அனிதா அச்சிவர்ஸ் அகாடமி’ என்ற அமைப்பின் சார்பில் பயிற்சி பெற்றிருக்கக்கூடிய 61 பேர்களுக்கு பல்வேறு தொழிற்கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றது.

அதேபோல் பல்வேறு தொகுதியில் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்கள் தையல் இயந்திரங்கள், மீன்பாடி வண்டிகள் போன்ற பல கோரிக்கைகளை வைத்து பல்வேறு மனுக்களை தந்தார்கள் ஒவ்வொரு முறையும் நான் வரும் போது அவர்களுக்கான கோரிக்கைகளை நான் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றேன். எனவே, இந்த முறை தொகுதிக்கு வந்த நேரத்தில் பல கோரிக்கைகளை நிறைவேற்றி 16 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றது என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:

வேலூர் தொகுதி தேர்தல் பிரசாரத்திற்கு நீங்கள் எப்பொழுது போவீர்கள்? பிரசாரத்தில் என்ன பேசப்போகின்றீர்கள்?தேர்தல் பிரசாரத்திற்கு வாருங்கள். அப்பொழுது நான் என்ன பேசுகிறேன் என்பது உங்களுக்கு தெரியும். தேர்தலில் திமுகவிற்கான வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கின்றது?
வெற்றி வாய்ப்பு என்பது ஏற்கனவே, நடந்து முடிந்திருக்கக்கூடிய நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் எவ்வளவு பெரிய வெற்றியினைப் பெற்றிருக்கின்றோமோ. அதைவிடப் பலமடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
இவ்வாறு அவர் பதில் அளித்தார். நிகழ்ச்சியில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ, எம்எல்ஏக்கள் ரங்கநாதன், தாயகம் கவி, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், பகுதி செயலாளர்கள் முரளிதரன், நாகராஜன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Tags : win, Vellore, by multiple vote, winning MP election, Interview
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்