×

பெண்ணை கஞ்சா விற்பனைக்கு வற்புறுத்தி வசூல் தனியாக வங்கி கணக்கு துவங்கி மாமூலில் திளைத்த டிஎஸ்பி: சுவாரஸ்ய தகவல்கள் அம்பலம்

சேலம்: நாமக்கல் பெண்ணை கஞ்சா விற்பனைக்கு வற்புறுத்தி மாமூலில் திளைத்த டிஎஸ்பி சிக்கியது எப்படி என்ற சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளது. அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவாரா? என்ற பரபரப்பு எழுந்துள்ளது.சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கான போதை பொருள் தடுப்பு பிரிவின் டிஎஸ்பி அலுவலகம் சேலம் குரங்குச்சாவடியில் செயல்பட்டு வருகிறது. இதன் டிஎஸ்பியாக நாமக்கல்லை சேர்ந்த குமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். இவர் மீது திருச்செங்கோட்டை சேர்ந்த ராணி என்ற கஞ்சா வியாபாரி கொடுத்த புகாரின் பேரில், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார், டிஎஸ்பி குமார், இன்ஸ்பெக்டர் சாந்தா, தஞ்சாவூர் கருவூல கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மாமூல் வசூலை டிஎஸ்பி குமார் நூதன முறையில் பெற்றுள்ளார்.

இவரது மைத்துனர் சிபிசக்கரவர்த்தி, தஞ்சாவூர் கருவூலத்தில் கண்காணிப்பாளராக இருந்து வருகிறார். இவரது பெயரில் மாமூல் வசூலிப்பதற்காகவே தனியாக வங்கிக்கணக்கு துவங்கி, அதில் கஞ்சா வியாபாரிகளிடம் மாமூல் பெற்று வந்தது லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த வங்கி கணக்கில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல லட்சம் மாமூலாக வந்து விழுந்துள்ளது தெரியவந்திருக்கிறது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது: ராணியின் கணவர் குமார் கஞ்சா வியாபாரி. இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவருக்கு 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

தனது கணவரை விடுவிக்குமாறு ராணி, டிஎஸ்பியிடம் சென்று அவ்வப்போது கெஞ்சினார். அப்போது தான் டிஎஸ்பி குமார், ‘‘உனது கணவர் செய்த கஞ்சா தொழிலை நீ செய்தால் நீ மட்டுமல்லாது நாம் எல்லோரும் நன்றாக வாழலாம்’’ என்று அறிவுரை கூறியுள்ளார். ஆனால் ராணியோ, எனக்கு கஞ்சா விற்பனை செய்ய தெரியாது என்று கூறியுள்ளார். ஆனால் விடாப்பிடியாக கஞ்சா விற்பனை செய்தே ஆக வேண்டும் என பல டிப்ஸ்களை டிஎஸ்பி கொடுத்துள்ளார்.

வேறு வழியில்லாமல் கஞ்சா விற்பனையை துவங்கினார் ராணி. ஆந்திராவில் இருந்து வரும் கஞ்சா பொட்டலங்களை சிறு வியாபாரிகளுக்கு கை மாற்றி விடும் ராணி, அதன்மூலம் கிடைத்த தொகையை வைத்து டிஎஸ்பிக்கு மாமூல் கொடுக்க துவங்கினார். ₹1 லட்சம் கேட்டு, அது படிப்படியாக குறைக்கப்பட்டு மாதம் தோறும் ₹25 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் ஆனது. அது போக கேட்கும் போதெல்லாம் பணம் கொடுக்க வேண்டும் எனவும் பேச்சில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் எஸ்பி குமார், தஞ்சாவூர் கருவூலத்தில் உள்ள தனது மைத்துனர் சிபிசக்கரவர்த்தியின் வங்கி கணக்கிற்கு ₹25 ஆயிரத்தை அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார்.

ராணி மட்டுமல்லாது வேம்படிதாளம், இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி மற்றும் 4 மாவட்டத்தில் உள்ள முக்கியமான கஞ்சா வியாபாரிகள் இந்த வங்கி கணக்கிலேயே பணத்தை செலுத்தி வந்தனர். இதனால் மாமூல் பணம் கொட்டோ கொட்டு என கொட்டியுள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் ராணிக்கு கஞ்சா கொடுக்கும் வியாபாரி ₹3 லட்சத்துடன் தலைமறைவானார். இதுகுறித்து டிஎஸ்பியிடம் ராணி தெரிவித்துள்ளார். ஆனால் அவர் மாமூலை கொடுத்தே ஆக வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார். இதனால் தனது 4 குழந்தைகளை தாயிடம் ஒப்படைத்துவிட்டு, ஆந்திராவுக்கு ராணி ஓடிவிட்டார். நீ வந்து கஞ்சா வியாபாரம் செய்யவில்லை என்றால், உனது அண்ணன் பழனிசாமி, தாயை கைது செய்து விடுவோம் என கூறிய டிஎஸ்பி, அவரது தாய் கஞ்சா விற்பனை செய்ததாக அவரிடம் இருந்து இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்துள்ளார்.
இதையடுத்து ஆந்திராவில் இருந்து சேலம் வந்த ராணி, லஞ்ச ஒழிப்பு போலீசில் இத்தகவலை தெரிவித்து புகார் அளித்தார். அதன்பிறகே போலீசார் ரகசிய விசாரணை நடத்தி டிஎஸ்பியை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். இவ்வாறு போலீசார் கூறினர்.

எப்ஐஆர் பதிந்தும் சஸ்ெபண்ட் இல்லை...
இவ்வழக்கில் இருந்து டிஎஸ்பி தப்பிக்கவே முடியாது என போலீசார் தெரிவித்துள்ளனர். இவரது மைத்துனரின் வங்கி கணக்கிற்கு பணம் வந்ததை வலுவான ஆதாரமாக போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து தமிழக அரசுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிக்கை அனுப்பியுள்ளனர். வழக்கமாக அரசு அதிகாரிகள் மீது எப்ஐஆர் பதிவு செய்தவுடன் அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவது வழக்கம். ஆனால் இவர் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. கோர்ட் மூலம் நடவடிக்கை பாய்ந்ததும் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என கூறப்படுகிறது.

உடந்தையாக இருந்த சர்ச்சை இன்ஸ்பெக்டர்:
இந்த மாமூல் வசூல் விவகாரத்தில், டிஎஸ்பிக்கு பெண் இன்ஸ்பெக்டர் சாந்தா உடந்தையாக இருந்ததுடன், கஞ்சா வியாபாரிகளிடமும் மாமூல் பெற்றுள்ளார். இவர் தற்போது திருநெல்வேலியில் பணியாற்றி வருகிறார். இந்த சம்பவம் அனைத்தும் 2017 முதல் 2019 வரை நடந்ததாகும். சாந்தா சேலத்தில் இருந்து தர்மபுரிக்கு மாற்றப்பட்டார். அங்கும் இதுபோன்ற விவகாரத்தில் சிக்கிய காரணத்தால்தான் அவர் திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டார். இவரும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்  என்ற பரபரப்பு எழுந்துள்ளது. அதேபோல கருவூல கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி மீதும் நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.



Tags : Woman, Cannabis Sales, Mammool, Tired, DSP
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...