பாலியல் புகார் வழக்கு தொடர்பாக போலீஸ் கஸ்டடியில் முகிலனிடம் 3 மணி நேரம் விசாரணை: நீதிபதி உத்தரவையடுத்து சிபிசிஐடி அதிரடி

கரூர்: பாலியல் புகார் வழக்கு தொடர்பாக முகிலனிடம் 3 மணி நேரம் போலீஸ் கஸ்டடியில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் மீது நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஸ்வரி(37) என்பவர் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து முகிலனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். நேற்று முன்தினம் கரூர் ஜேஎம் 1 கோர்ட்டில் முகிலனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி  சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த விசாரணையை நீதிபதி விஜய் கார்த்திக் ஒத்திவைத்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. இதற்காக, முகிலனை கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது,  அவர் வேனில் இருந்து இறங்கியபோது தனது சட்டையை கழற்றி காட்டியவாறு,  சிறையில் என்னை தாக்கினார்கள். அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும். ராம்குமாரை சிறையில் கொன்றது போல் என்னையும் கொலை செய்ய சதி செய்கிறார்கள். வழுக்கி விழுந்து விட்டேன், தவறி விழுந்து விட்டேன் என்று தெரிவித்தால், அதற்கு  இந்த அரசுதான் காரணம் என்று கோஷமிட்டபடி கோர்ட்டுக்குள் சட்டையின்றி வெற்றுடம்புடன் நுழைந்தார்.பின்னர் அவரை நீதிபதி விஜய்கார்த்திக் முன்பு ஆஜர்படுத்தி விசாரிக்க அனுமதி கோரினர். இதன்பின், அரசு வழக்கறிஞர் ஜெயந்திக்கும், முகிலனின் வழக்கறிஞர் கென்னடிக்கும் இடையே வாதம் ஏற்பட்டது.

கென்னடி பேசுகையில், முகிலனை போலீசார் வேண்டுமென்றே காவலில் எடுக்க முயற்சிக்கின்றனர். குற்றம் நடந்ததாக கூறப்படும் இடம் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர். ஆனால் அங்கு வழக்கு பதியாமல் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்துள்ளனர். இது புனையப்பட்ட வழக்கு. போலீசார் அவரை காவலில் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எதிர்ப்பு தெரிவித்தார்.அதற்கு அரசு வழக்கறிஞர் ஜெயந்தி, விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் போலீஸ் காவலில் எடுக்கப்படுகிறார் என்றார். அதனைதொடர்ந்து முகிலனிடம் 3 மணி நேரம் மட்டும் விசாரணை நடத்த அனுமதி அளித்த நீதிபதி, மாலை கோர்ட் களைவதற்குள் மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, பிற்பகல் 3.15 மணி அளவில் சிபிசிஐடி போலீசார் முகிலனை வேனில் ஏற்றி காந்தி கிராமத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். முகிலனிடம் 3 மணி நேரம் விசாரணை முடித்து மாலை 6.15 மணி அளவில் அவரை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Related Stories: