ஆட்டோ டிரைவர் கொலையில் கள்ளக்காதலன் காவல் நிலையத்தில் சரண்

அண்ணாநகர்: ஆட்டோ டிரைவர் கொலையில் கோயம்பேடு காவல் நிலையத்தில் கள்ளக்காதலன் சரணடைந்தார். சென்னை நெற்குன்றம் சக்தி நகர் 24வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (28). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி காயத்ரி (26). தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். திருவண்ணாமலையை சேர்ந்தவர் மகேந்திரன் (30). கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வந்தார். மனைவியை பிரிந்து வசித்து வந்த மகேந்திரன், சென்னையில் பானு என்பவரை திருமணம் செய்து கொண்டு, நாகரஜன் வீட்டின் அருகில் வசித்து வந்தார். அப்போது, நாகராஜூம், மகேந்திரனும் நண்பர்களாகினர். இதனால் நாகராஜ் வீட்டிற்கு அடிக்கடி மகேந்திரன் சென்று வந்துள்ளார். அப்போது, நாகராஜின் மனைவி காயத்ரிக்கும், மகேந்திரனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது நாகராஜூக்கு தெரியவந்ததால், மனைவியை கண்டித்துள்ளார்.

தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த நாகராஜை தீர்த்துக்கட்ட மகேந்திரன் முடிவு செய்தார். இதற்கு காயத்திரி, பானு ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். பின்னர், திட்டமிட்டபடி கடந்த 2 நாட்களுக்கு முன் நாகராஜை கொலை செய்தனர்.இதுபற்றி கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து காயத்ரி, மகேந்திரன் மனைவி பானு ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய, மகேந்திரனை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு கோயம்பேடு காவல் நிலையத்தில் மகேந்திரன் சரணடைந்தார். அவரை கைது செய்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

× RELATED துறையூறில் மினி ஆட்டோ கிணற்றுக்குள் விழுந்து விபத்து: 13 பேர் காயம்