வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்த ரூ.97 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல்: 8 பேர் பிடிபட்டனர்

சென்னை: சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில், கடலூரை சேர்ந்த ஆயிஷா (39) என்பவர் சிங்கப்பூருக்கு சுற்றுலா பயணியாக சென்று சென்னை திரும்பினார். அவரது உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதித்தனர். அதில் எதுவும் இல்லை. சந்தேகம் தீராத அதிகாரிகள், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று, பெண் அதிகாரிகள் மூலம் சோதித்தனர். அப்போது, அவரது உள் ஆடைக்குள் 390  கிராம் தங்க கட்டிகள் இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ₹14 லட்சம். அவரை கைது செய்தனர். இதேபோல் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு துபாயில் இருந்து எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அதில், ராமநாதபுரத்தை சேர்ந்த ஷேக்தாவூத் (30),  சையத் அபுபக்கர் (33), சாகுல் அமீது (39) ஆகிய 3 பேர் சுற்றுலா பயணியாக துபாய் சென்று சென்னை திரும்பினர். இவர்களது உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்ட போது அதில் எதுவும் இல்லை. பின்னர் தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்தபோது உள் ஆடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தனர். 3 பேரிடம் இருந்து 1 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ₹37.8 லட்சம். 3 பேரையும்  கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து ₹1 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு சிகரெட்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில்,  சென்னையை சேர்ந்த லியாகத் அலி (29), ராமநாதபுரத்தை சேர்ந்த மொய்தீன் (51), யாசர் அரபாத் (25), ஷேக் சாகித் (40) ஆகிய 4 பேர் சுற்றுலா பயணியாக சென்று, திரும்பி வந்தனர்.  இவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்ட போது இவர்களின்  ஆசன வாய்க்குள் 1 கிலோ 210 கிராம் தங்கம் இருப்பது தெரிந்து. அவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து 4 பேரையும் சுங்க அதிகாரிகள்  கைது செய்தனர்.  மொத்தம் 8 பேரிடம் இருந்து ₹97 லட்சம் மதிப்புடைய 2.6 கிலோ தங்க கட்டிகள் மற்றும் ஒரு லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு சிகரட்டுகளையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 8 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


× RELATED சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு