×

பின்லேடனை பிடிக்க அமெரிக்காவிற்கு நாங்கள் உதவினோம்: போட்டு உடைத்தார் இம்ரான் கான்

வாஷிங்டன்: ஒசாமா பின்லேடனை கண்டுபிடிக்க அமெரிக்காவிற்கு உதவியது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புதான் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு மே 2ம் தேதி பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவை சேர்ந்த வீரர்கள் சுட்டுக்கொன்றனர். அப்போது பின்லேடன் பதுங்கியிருந்தது தங்களுக்கு தெரியாது என பாகிஸ்தான் மறுத்திருந்தது. இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ கொடுத்த தகவலால்தான் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த இடத்தை அமெரிக்காவால் கண்டுபிடிக்க முடிந்தது. சிஐஏவிடம் இதுகுறித்து கேட்டால் தொலைபேசி மூலமாக ஐஎஸ்ஐ தகவல் கொடுத்தது தெரியவரும். பாகிஸ்தான் டாக்டர் அப்ரிடி விடுதலை என்பது பாகிஸ்தானுக்கு உணர்வுப்பூர்வமான பிரச்னையாகும். அவர் அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக கருதப்படுகின்றது.பாகிஸ்தானில் நாங்கள் எப்போதும் அமெரிக்காவின் நட்பு நாடு என்பதை உணர்ந்திருக்கிறோம். ஒசாமா குறித்த தகவல்கள் எங்களுக்கு வழங்கப்பட்டு இருந்தால் நாங்களே அவரை வெளியேற்றி இருப்போம். அமெரிக்காவுக்காக தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் போராடிக் கொண்டிருந்தது. ஆனால் ஒசாமாவுக்காக நடத்தப்பட்ட சோதனை மற்றும் ஒசாமா கொலை சம்பவங்கள் பாகிஸ்தானை சங்கடப்படுத்திவிட்டன. நாங்கள் அமெரிக்காவுடன் நட்பாக இருந்தோம். ஆனால் அமெரிக்கா எங்களை நம்பவில்லை. எங்கள் தேசத்துக்குள் அவர்கள் வந்தார்கள், குண்டு வீசினார்கள், அந்த நபரை கொன்றார்கள்.

ஒசாமா சாதாரண மனிதர் அல்ல. அவர் 3000த்துக்கும் அதிகமான அமெரிக்கர்களை கொன்றுள்ளார். ஆனால் பாகிஸ்தான் இந்த போரில் 70ஆயிரம் பேரை இழந்துள்ளது. நாங்கள் அமெரிக்காவுக்காக போராடினோம். இந்த போரில் 70ஆயிரம் பேரையும் இழந்தோம். ஒசாமாவுக்கு எதிரான முழுநடவடிக்கையும் எடுக்கப்பட்ட விதத்தால் வெளிப்படையாக நிறைய கோபம் இருந்தது. ஆனால் உங்கள் அனைவருக்கும் தெரியும் இவை எல்லாம் கடந்த காலங்கள். பாகிஸ்தானின் நரம்பியல் விஞ்ஞானி ஆபியா சித்தியை விடுவிக்க தயாராகும்பட்சத்தில் அப்ரிடியை விடுவிப்பது குறித்து பரிசீலிக்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். ஆபியா சித்தி, 2010ம் ஆண்டு எப்பிஐ ஏஜென்சி மற்றும் வீரர்களை சுட்டுக்கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டு 86 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Tags : We helped , US capture, Bin Laden, Imran Khan
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்