தென் கொரியாவுக்குள் நுழைந்த ரஷ்ய விமானம்: 360 ரவுண்டு எச்சரிக்கை தாக்குதல்

சியோல்: ரஷ்யாவின் ஏ-50 ரக போர் விமானம் தென் கொரிய வான்வெளிக்கு உட்பட்ட சர்ச்சைக்குரிய டோகோ தீவுப் பகுதியில் நேற்று காலை 9 மணியளவில் அத்துமீறி நுழைந்தது. இதையடுத்து தென் கொரிய விமானப்படைக்கு சொந்தமான எப்-15கே, கேஎப்-16 போர் விமானங்கள் ரஷ்ய விமானத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் 80 சுற்று துப்பாக்கிச்சூடு நடத்தின. இதனைத் தொடர்ந்து ரஷ்ய விமானம் தென் கொரிய எல்லையை விட்டு வெளியேறியது. அதன் பின்னர், அரைமணி நேரம் கழித்து ரஷ்ய போர் விமானம் மீண்டும் தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தது. இம்முறை 280 சுற்று எச்சரிக்கை தாக்குதல் நடத்தப்பட்டது.

இது தொடர்பாக தென்கொரிய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘மீண்டும் ஒருமுறை இது போன்று அத்துமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரஷ்யாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்றார். ஆனால் ரஷ்யா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஜப்பானுக்கு அருகில் உள்ள சர்வதேச நீர் எல்லைப் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன என தெரிவிக்கப்பட்டுள்ளது.தென் கொரியாவில் உள்ள டோகோ தீவு ஜப்பான் கடல் பகுதிக்கு அருகில் இருப்பதால் ஜப்பானும் அதற்கு உரிமை கொண்டாடி வருகிறது. இதனால் அப்பகுதிக்குள் ரஷ்ய விமானம் அத்துமீறி நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: