×

காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா மத்தியஸ்தம் பிரதமர் பதிலளிக்க கோரி நாடாளுமன்றத்தில் கடும் அமளி: வெளியுறவு அமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து காங்கிரஸ் வெளிநடப்பு

புதுடெல்லி: காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யுமாறு பிரதமர் மோடி தன்னிடம் கேட்டுக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய விவகாரம் பெரும் சர்ச்சையாகி உள்ளது. இதுகுறித்து, நாடாளுமன்றத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி எம்பிக்கள், பிரதமர் மோடி நேரில் வந்து பதிலளிக்க வேண்டுமென கடும் அமளியில் ஈடுபட்டனர். இரு அவையிலும் காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.
அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அதிபர் டிரம்ப்பை நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது இம்ரானிடம் அதிபர் டிரம்ப், ‘‘ஜப்பானின் ஒசாகாவில் கடந்த 2 வாரங்களுக்கு முன் நடந்த ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி என்னை சந்தித்து பேசினார். அப்போது காஷ்மீர் பிரச்னையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நான் மத்தியஸ்தம் செய்து வைக்க வேண்டுமென அவர் விரும்புவதாக கேட்டுக் கொண்டார். 70 ஆண்டாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு என்னால் தீர்வு ஏற்படும் என்றால், அதற்காக மத்தியஸ்தம் செய்ய தயார் என்றேன்’’ என கூறியதாக தகவல்கள் வெளியாகின.இதற்கு இந்தியா தரப்பில் உடனடியாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ‘‘இதுபோன்ற எந்த கோரிக்கையையும் பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப்பிடம் முன்வைக்கவில்லை’’ என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார் நேற்று முன்தினம் இரவே மறுப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில், அதிபர் டிரம்ப் விவகாரம் நேற்று நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. மாநிலங்களவை கூடியதுமே, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை கொடுத்தன. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவர், ‘‘அமெரிக்க அதிபரிடம் பிரதமர் மோடி இதுபோன்ற எந்த கோரிக்கையையும் விடுக்கவில்லை. இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்னைகளுக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. பாகிஸ்தானுடன் பேசுவதற்கு அந்நாடு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும் என்பது நிபந்தனையாக இருக்கும். இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்னைகளுக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான அடிப்படையை சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனம் வழங்குகிறது’’ என்றார்.ஆனால், இந்த விளக்கத்தை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. பிரதமர் மோடி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென வலியுறுத்தினர். காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், ‘‘இந்த விஷயத்தில் பிரதமர் மோடியை நாங்கள் நம்புகிறோம். ஆனாலும், அவர் அவைக்கு நேரில் வந்து அதிபர் டிரம்ப் கூறிய கருத்து பொய் என விளக்கமளிக்க வேண்டும்’’ என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா, ‘‘காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுவிட்டதா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் வெளியுறவுத்துறை அதிகாரிகள் பதிலளித்தால் போதாது. பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும்’’ என்றார். இதன் காரணமாக ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால் அவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. மதியம், காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.மக்களவையிலும் இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பியது. அங்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சென்று விளக்கமளித்தார். அவரது விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பிரதமர் மோடி நேரில் ஆஜராக கோரி கோஷமிட்டனர். அப்போது பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு, ‘‘இது, பிரதமர் மோடி நேரடியாக சம்மந்தப்பட்டுள்ள விஷயம். அதனால் அவரே அவையில் விளக்கம் அளிப்பதே சரியானது’’ என்றார்.ஆனால், ஜெய்சங்கர் விளக்கம் அளித்தபோதே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மன்னிப்பு கேட்டஅமெரிக்க எம்பி
காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்க எம்பிக்கள் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி உள்ளனர். அதிபர் டிரம்ப் கருத்துக்காக, அமெரிக்க மக்கள் சார்பில் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்பி பிராட் செர்மன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அமெரிக்க எம்பிக்கள் பலரும் டிரம்ப்பின் கருத்துக்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

இம்ரான் வரவேற்பு: அமெரிக்கா பல்டி
அமெரிக்க அதிபரின் பேச்சுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘இருதரப்பு பேச்சு மூலம் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. இப்போது, 100 கோடி மக்களின் பிரார்த்தனையின் பலனாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்வதாக கூறி உள்ளார். இந்த விஷயத்தில், அமெரிக்க அதிபர் பங்கு மிகப்பெரிதாக இருக்கும்’’ என்றார். ஆனால், அதிபர் டிரம்ப் பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து, அமெரிக்கா இந்த விஷயத்தில் திடீர் பல்டி அடித்துள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தனது கொள்கையை மாற்றிக் கொண்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், ‘‘காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தானும், இந்தியாவும் பேச்சு நடத்த டிரம்ப் நிர்வாகம் வரவேற்கிறது. இரு நாடுகளும் கேட்டுக் கொண்டால், அமெரிக்கா உதவும்’’ என்றார்.

தயாராக வந்திருந்த சோனியா காந்தி
டிரம்ப் விவகாரத்தில், அரசுக்கு கடும் அழுத்தம் தர வேண்டும் என்பதற்காக  சோனியா காந்தி முன்கூட்டியே முன்னேற்பாடுகளுடன் அவைக்கு வந்திருந்தார். டிரம்ப் பேச்சை முழுமையாக இந்தியில் மொழிபெயர்ப்பு செய்து அந்த தாள்களை பைலில் வைத்திருந்தார். மக்களவையில் பூஜ்ய நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர் மனோஜ் திவாரி இவ்விவகாரத்தை கிளப்பி பேச ஆரம்பித்தபோது, அந்த தாள்களை சோனியா, தனது பைலில் இருந்து எடுத்து திவாரியிடம் கொடுத்தார்.

Tags : United States meddles, Kashmir issue,Prime Minister responds: Parliament,foreign minister's ,explanation
× RELATED தொற்று நோயால் இறந்தவர்களின் இறப்பு...