×

தொழில் பாதுகாப்பு, ஊதிய மசோதா மக்களவையில் அறிமுகம்: நிலைக்குழுவுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் கோரிக்கை

புதுடெல்லி: தொழில்பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிகள் நிலை மசோதா - 2019 நேற்று மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி 10 அல்லது 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் தொடர்பான மத்திய அரசின் 13 சட்டங்களை ஒருங்கிணைத்து ஒரே சட்டமாக்கப்படும். இந்த மசோதாவின் கீழ் சேவை நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வர்த்தக மற்றும் உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைமை பலமடங்கு உயர்த்தப்படும்.இதேபோல் நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளம் மற்றும் குறைந்தபட்ச ஊதியம் தொடர்பாக தற்போது உள்ள சட்டங்கள் இணைக்கப்பட்டு ஒரே சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும். இதற்காக தற்போதுள்ள 44 தொழிலாளர்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வர்த்தகத்தை பெருக்கவும், முதலீட்டை அதிகரிப்பதும் உறுதி செய்யப்படும்.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து  காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி  பேசியதாவது: இந்த மசோதா பிரச்னைக்குரியது என்பதால் இதை நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பிவைக்க வேண்டும். இந்த மசோதாவை நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பி வைக்காவிட்டால் அது மிகப்பெரிய அநீதியாக இருக்கும். இந்த மசோதா தொடர்பான விவாதத்துக்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்படவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி எம்பி பிரேமசந்திரன் உள்ளிட்டோர் இந்த மசோதாவை நாடாளுமன்ற குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கேங்வார், ‘‘இந்த மசோதா கடந்த மக்களவை கூட்டத்திலேயே 13 பணியாளர் அமைப்புகளுடன் ஆலோசனை செய்யப்பட்டு நிலைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டு விட்டது’’ என்றார்.

Tags : Labor Security ,Wage Bill,Introduced ,Lok Sabha:
× RELATED யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம்: மகளிர்...