×

திருச்சி வாரியர்சுக்கு 149 ரன் இலக்கு

திருநெல்வேலி: சேப்பாக் சூப்பர் கிலீஸ் அணியுடனான டிஎன்பிஎல் டி20 லீக் ஆட்டத்தில், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கு 149 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.நெல்லை, இந்தியா சிமென்ட் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசியது. சூப்பர் கில்லீஸ் தொடக்க வீரர்களாக கேப்டன் கவுஷிக் காந்தி, கங்கா ஸ்ரீதர் ராஜு களமிறங்கினர். காந்தி 1 ரன் மட்டுமே எடுத்து விக்னேஷ் பந்துவீச்சில் அரவிந்த் வசம் பிடிபட, சேப்பாக் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. ஸ்ரீதர் ராஜு - கோபிநாத் ஜோடி 2வது விக்கெட்டுக்கு அதிரடியாக 58 ரன் சேர்த்தது. கோபிநாத் 37 ரன் (25 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி விக்னேஷ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் மணி பாரதி வசம் பிடிபட்டார். கங்கா ராஜு 26 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த சசிதேவ் 12, முருகன் அஷ்வின் 18 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

கடைசி கட்டத்தில் அதிரடியில் இறங்கிய ஹரிஷ் குமார் சிக்சர்களாகப் பறக்கவிட்டு மிரட்டினார். அவர் 39 ரன் (23 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி சரவணகுமார் பந்துவீச்சில் அரவிந்த் வசம் பிடிபட்டார். சூப்பர் கில்லீஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன் குவித்தது. ஆரிப் 3 ரன், ராகுல் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். திருச்சி வாரியர்ஸ் பந்துவீச்சில் சரவண குமார் 2, கே.விக்னேஷ், எல்.விக்னேஷ், பொய்யாமொழி, சாய் கிஷோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 149 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி வாரியர்ஸ் களமிறங்கியது.

Tags : 149-run,target, Trichy,Warriors
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்