×

ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் அமைக்கும் விவகாரம் அதிமுக எம்எல்ஏவை முற்றுகையிட்டு வியாபாரிகள் கடும் வாக்குவாதம்: ஈரோட்டில் பரபரப்பு

ஈரோடு: ஈரோட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் அமைக்கும் திட்டத்தை தீபாவளி பண்டிகை வரை தள்ளிவைக்க வேண்டும் என வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்காததால் அதிமுக எம்எல்ஏ தென்னரசை முற்றுகையிட்டு வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் ஈகேஎம் அப்துல்கனி ஜவுளி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரம் ஜவுளி கடைகள் இயங்கி வருகிறது. எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததால் இங்கு ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் அமைக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இங்கு ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் அமைக்க ரூ.51.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான டெண்டர் கடந்த நவம்பர் மாதம் விடப்பட்டும் பணி  துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இதுதவிர, இங்கு செயல்பட்டு வரும் ஜவுளி கடைகளை இடமாற்றுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. ஆனால், போதிய இடம் கிடைக்காததால் கட்டுமான பணிக்கு 50 ஆயிரம் சதுரஅடி இடம் தவிர மற்ற இடத்தில் கடைகளை வைத்துக் கொள்ள ஜவுளி வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மேலும், கட்டுமான பணிக்கு கடைகளை அகற்ற வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், ஜவுளி வியாபாரிகள் தீபாவளி பண்டிகை வரை கடைகளை அகற்ற மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்பிரச்னை தொடர்பாக நேற்று ஜவுளிசந்தை வியாபாரிகள் 100 பேர் ஈரோடு காலிங்கராயன் இல்லத்தில் உள்ள அதிமுக எம்எல்ஏ தென்னரசு அலுவலகத்திற்கு சென்று அவருடன் பேச்சு நடத்தினர். இதில், இங்கு தீபாவளி பண்டிகை வரை தொடர்ந்து கடை நடத்த அனுமதி பெற்று தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதில் அளித்து தென்னரசு, இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து முறையிடுங்கள்’’ என்றார்.

இதற்கு ஜவுளி வியாபாரிகள், நீங்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசினால் தள்ளி வைத்து விடுவார்கள் என்று கேட்டனர். ஆனால், தன்னால் எதுவும் செய்ய முடியாது என எம்எல்ஏ தென்னரசு கூறினார். இதுதொடர்பாக வியாபாரிகளுக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சுமார்  ஒருமணி நேரமாக நடந்த பேச்சுவார்த்தையில் எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில் வியாபாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.



Tags : Integrated Textile Complex, AIADMK MLA, Erode
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...