கேரளாவில் ரெட் அலர்ட் விடப்பட்டு கனமழை கொட்டினாலும் பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைவது ஏன்?

* இடுக்கி அணைக்கு ரகசியமாக திருப்பிவிடும் கேரளா

* அம்பலப்படுத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்

தேனி: கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையிலும் பெரியாறு அணைக்கு நீர்வரத்து எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதற்குக் காரணம், பெரியாறு அணைக்கு வரவேண்டிய மழை நீரை, கேரள அரசு ஆங்காங்கே தடுப்பணைகள் அமைத்து இடுக்கி அணைக்கு திருப்பி விடும் பகீர் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருவதால் ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டுள்ளது. பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை கொட்டி வருகிறது. அப்படி இருந்தும் பெரியாறு அணைக்கு எதிர்பார்த்த அளவு தண்ணீர் வரத்து இல்லை. இதற்கான காரணம் குறித்து கேட்டபோது, தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி மொத்தம் 777 சதுர கிமீ. அணையின் முழு நீர்மட்ட உயரம் 152 அடி. இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாமென உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

ஜூலை 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் சராசரியாக 50 மிமீ மழை பெய்துள்ளது. 777 சதுர கிமீ பரப்பில் பெய்யும் மழைநீர் முழுவதையும் பெரியாறு அணையில் தேக்க, அணை ஒப்பந்தம் மூலம் தமிழகத்திற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் மழை மிக, மிக குறைவு. பெரியாறு அணை நீர் மூலம்தான் தமிழகத்தின் பாசன தேவையும், குடிநீர் தேவையும் தற்போது வரை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 17ம் தேதி முதல் நேற்று வரை இடுக்கி மாவட்டத்தில் கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டு கனமழை கொட்டி வருகிறது. ஆனால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 900 கனஅடியை எட்டவில்லை. அணை நீர்மட்டம் 114 அடிக்கும் குறைவாகவே உயர்ந்துள்ளது.ஜூலை 17ம் தேதி இடுக்கி அணையின் நீர்மட்டம் கடல் மட்டத்தில் இருந்து 2,304 அடியாக இருந்தது. நேற்று 2314.8 அடியாக உயர்ந்துள்ளது. இடுக்கி அணை, பெரியாறு அணையை விட 8 மடங்கு பரப்பளவில் பெரியது. இவ்வளவு பெரிய அணையின் நீர்மட்டம் ஒரே வாரத்தில் 10 அடி உயர்ந்து நேற்று 2,314.8 அடியாக இருந்தது. பெரியாறு அணை நிறைந்தால் மட்டுமே உபரிநீர், வண்டிப்பெரியாறு ஆற்றின் வழியாக திறக்கப்படும்.

 தற்போது பெரியாறு அணை நீர்மட்டம் 114 அடிக்கும் குறைவாக உள்ள நிலையில், வண்டிப்பெரியாறு ஆற்றில் 8 அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏற்கனவே கேரள அரசு, கட்கி அணை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டி பெரியாறு அணைக்கு வரும் நீரை தடுத்து இடுக்கி அணைக்கு திருப்பி விட்டுள்ளது. இந்த சூழலிலும் கடந்த ஆண்டு வரை பெரியாறு அணைக்கு குறிப்பிடத்தக்க அளவு தண்ணீர் வரத்து இருந்தது. தற்போது இதிலும் கேரள அரசு கைவைத்து விட்டது. குறிப்பாக, பாம்பனாறு தண்ணீர் பட்டுமலை, பருந்தும்பாறை வழியாக பெரியாறு அணைக்கு வந்து கொண்டிருந்தது. கேரள அரசு இதனை தடுத்து, சுரங்கம் தோண்டி இந்த நீர் முழுவதையும் இடுக்கி அணைக்கு கொண்டு செல்கிறது.

தற்போது தமிழக அரசியலில் நடைபெறும் குழப்பங்கள் கேரளாவிற்கு மிகவும் சாதகமாக போய் விட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கேரளா சிறு, சிறு தடுப்பணைகள் மூலமும், ஓடைகள் வெட்டியும் பெரியாறு அணைக்கு வரும் நீர் முழுவதையும் இடுக்கி அணைக்கு கொண்டு சேர்த்து விட்டது. இதே நிலை நீடித்தால், கேரளாவில் எவ்வளவு மழை பெய்தாலும், இனிமேல் பெரியாறு அணைக்கு தண்ணீர் வருமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறி உள்ளது. உடனடியாக தமிழக அரசு தலையிட்டு இந்த பிரச்னையை தீர்க்க, மத்திய அரசிடம் முறையிட்டு வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் பெரியாறு அணையும் வறண்டு விடும் அபாயம் உள்ளது. இவ்வாறு கூறியுள்ளனர்.

Related Stories: