ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது 6 மாவட்டங்களில் விவசாயிகள் பேரணி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருவாரூர்: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில்  ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு மத்திய அரசு  அனுமதி வழங்கி உள்ளது. இதை எதிர்த்து டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள்,  பொதுமக்கள் போராட்டம் நடத்தி  வருகிறார்கள். இந்தநிலையில் ஹைட்ரோ கார்பன்  திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும், தமிழக அரசு இந்த திட்டத்துக்கு  அனுமதி வழங்க கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில்  பேரணி நடத்த விவசாயிகள் சங்க கூட்டமைப்பு முடிவு  செய்திருந்தது. அதன்படி 6 மாவட்ட தலைநகரங்களிலும் நேற்று பேரணி நடத்தி  கலெக்டரிடம் மனு அளித்தனர். திருவாரூரில் புதிய பஸ் நிலையத்தில் தொடங்கிய பேரணி, விளமல் கல்பாலம் வழியாக கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது.  இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள்  கலந்து கொண்டனர்.

பேரணி முடிவில் கலெக்டர் ஆனந்திடம் மனு அளித்தனர். தஞ்சையில் காவிரி படுகை பாதுகாப்பு  கூட்டியக்கம் மற்றும் அனைத்து கட்சி சார்பில் தஞ்சை டான்டெக்ஸ்  ரவுன்டானாவில் திரண்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் அங்கிருந்து பேரணியாக  புறப்பட்டு கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர், கலெக்டர் அண்ணாதுரையிடம் கோரிக்கை மனுவை  அளித்தனர். புதுக்கோட்டையில்  நீதிமன்ற வளாகத்திலிருந்து பேரணியாக விவசாயிகள் புறப்பட்டு  புதுக்கோட்டை கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். நாகையில்  அவுரித்திடலில் தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக கலெக்டர்  அலுவலகத்தை அடைந்தது. மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் நாகை மாலி தலைமையில்  நடந்த இந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை அஞ்சல் நிலையம் அருகில் விவசாயிகள் திரண்டனர். அப்போது, காவல்துறையினர், பேரணிக்கு தடை விதித்தனர். இருப்பினும் தடையை மீறி பேரணி புறப்பட்டு ஆல்பேட்டை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றது. ஆனால், ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழைய விடாமல் போலீசார் தடுத்ததால், முற்றுகை போராட்டமாக மாறியது. சிறிதுநேரத்துக்குபின், அலுவலகத்திற்கு சென்று மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரனிடம் கோரிக்கை மனு அளித்தனர். விழுப்புரத்தில் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

தஞ்சை  மன்னர் சரபோஜி கல்லூரி வளாகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக  இந்திய மாணவர் சங்கம் சார்பில்  மாவட்ட செயலாளர் அரவிந்த்சாமி தலைமையில்  கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பங்கேற்றனர். பின்னர், கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல தயாரானார்கள். அவர்களை வெளியே விடாமல் கல்லூரி கேட்டை பேராசிரியர்கள் பூட்டினர். அப்போது ஒரு மாணவரை பேராசிரியர் அடித்து விட்டார். இதை  கண்டித்து மாணவ, மாணவிகள் கண்டன கோஷமிட்டனர். அவர்களை பேராசிரியர்கள்  சமாதானப்படுத்தினர். இதன்பின், போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர்.

Related Stories: