புதுவையில் ஒன்று உட்பட 23 பல்கலைக்கழகங்கள் அங்கீகாரம் இல்லாதவை: யூஜிசி அறிவிப்பு

புதுடெல்லி:  நாடு முழுவதும் 23 பல்கலைக்கழகங்கள், சுயமாக இயங்குபவை, அங்கீகாரம் பெறாதவை என யூஜிசி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சில பல்கலைக்கழகங்கள் யூஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வருகின்றன. இதுபோன்ற பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய அங்கீகாரம் பெறாமல் போலியாக இயங்கி வரும்  பல்கலைக்கழங்கள் குறித்த பட்டியலை யூஜிசி வெளியிட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 23 பல்லைக்கழகங்கள் யூஜிசியிடம் அனுமதி பெறாமல் இயங்கி வருகின்றன.

அதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 8 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து டெல்லியில் 7 போலி பல்கலைக்கழகங்களும், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் புதுச்சேரியிலும் போலி பல்கலைக்கழங்கள் இயங்கி வருகின்றன. மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் தலா இரண்டு போலி பல்கலைக்கழகங்கள் செயல்பாட்டில் உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் வாரணாசியில் வாரணாசியா சான்ஸ்கிரிட் விஸ்வவித்யாலயா, காந்தி இந்தி வித்யாபீடம், பிரயாக்ராஜில் உள்ள மகிளா கிராம் வித்யாபீத், கான்பூரில் எலக்ட்ரோ காம்பிளக்ஸ் ஹோமியோபதி, அலிகாரில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், மதுராவில் உத்தரப் பிரதேச விஸ்வவித்யாலயா, பிரதாப்கரில் மகாராணா பிரதாப் சிக்‌ஷா நிகேதன் விஸ்வவித்யாலயா மற்றும் நொய்டாவில் இந்திரபிரசாத் சிக்‌ஷா பரிஷத், புதுச்சேரியில் போதி அகாடமி ஆப் ஹையர் எஜூகேஷன் ஆகியவை அங்கீகாரம் பெறாத போலி பல்கலைக்கழகங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் யுனைடெட் நேஷன்ஸ் பல்கலை, ஒகேஷனல் பல்கலைக்கழகம், ஏடிஆர் சென்ட்ரிக் ஜூரிடிகல், இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ், அத்யாத்மிக் விஸ்வவித்யாலயா, விஸ்வகர்மா பல்கலைக்கழகங்கள் அங்கீகாரம் பெறாதவை என கண்டறியப்பட்டுள்ளது.

Related Stories: