நாய்க்கு பயந்து வீட்டில் நுழைந்த இளைஞர் உயிரோடு எரித்து கொலை: திருடன் என நினைத்து விபரீதம்

லக்னோ: தெரு நாய்க்கு பயந்து அருகேயுள்ள வீட்டில் நுழைந்த இளைஞரை திருடன் என நினைத்து வீட்டின் உரிமையாளர் தீவைத்து எரித்து கொன்றார்.   உத்தரப் பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் சுஜித் குமார்(28). இவர் தேவா பகுதியின் ராகோபூர் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு கடந்த 19ம் தேதி சென்றார். அதிகாலை 2 மணிக்கு சென்ற அவரை அங்கிருந்த தெருநாய்கள் குரைத்தபடி விரட்டி சென்றன. தப்பிக்க வழி தெரியாத சுஜித் குமார் அருகேயிருந்த ஒரு வீட்டுக்குள் நுழைந்தார். நாய் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்து வந்த வீட்டின் உரிமையாளர் அங்கு இளைஞர் ஒருவர் பதுங்கியிருப்பதை கண்டு திருடன் என்று கருதினார்.

இதையடுத்து சுஜித்தை சரமாரியாக தாக்கிய வீட்டில் உள்ளவர்கள் பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீவைத்து எரித்தனர். இதில் படுகாயம் அடைந்த சுஜித்குமார் அலறித் துடித்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சுஜித் குமாரை மீட்டு லக்னோவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த சுஜித்குமார் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவுசெய்த போலீசார் 4 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Dog, youth, burned to death
× RELATED கோயில் அருகே அட்டூழியம் ஐதராபாத்தில்...