‘நினைத்தால் ஒரு கோடி பேரை அழிக்க முடியும்’ போர் குறித்த டிரம்பின் கருத்து தெளிவுபடுத்த ஆப்கன் வலியுறுத்தல்

காபூல்: ஆப்கானிஸ்தான் குறித்து அதிபர் டிரம்ப் கூறிய கருத்தை அமெரிக்கா தெளிவுப்படுத்த வேண்டும் என அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி வலியுறுத்தி உள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார். இவை அனைத்தும் மிகுந்த சர்ச்சைக்குள்ளாகி உள்ளன. கடந்த 1990ம் ஆண்டில் இருந்து ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் ஆதரவு மற்றும் நிதியுதவி அளித்து வருவதாக அந்நாடு குற்றம்சாட்டி வருகின்றது. மேலும் தலிபான்களுடனான பேச்சுவார்த்தையின்போது அதிபர் கனி தொடர்ந்து அமெரிக்காவால் புறக்கணிக்கப்பட்டு வருவதாலும் அந்நாட்டு அரசு அதிருப்தியில் இருந்து வருகின்றது. இந்நிலையில் அதிபர் டிரம்பின் கருத்து அந்நாட்டு மக்களிடையே வருத்தத்தையும், கோபத்தையும் தூண்டுவதாக அமைந்துள்ளது.

 

இம்ரான் உடனான சந்திப்பின் போது அதிபர் டிரம்ப், ‘‘ஆப்கனில் மோதலை உடனடியான முடிவுக்கு கொண்டு வருவதற்கு என்னிடம் திட்டங்கள் உள்ளன. ஆனால் அது நாட்டை முற்றிலும் அழித்துவிடும். 10 நாட்களில் போரில் வெற்றி பெற முடியும். ஆனால் அதனால் ஒரு கோடி மக்கள் பலியாவார்கள். நான் அந்த வழியை விரும்பவில்லை” என்று கூறியிருந்தார். அதிபர் டிரம்பின் இந்த கருத்து ஆப்கானிஸ்தானை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்நிலையில் அதிபர் டிரம்பின் ஆப்கானிஸ்தான் தொடர்பான கருத்து குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என ஆப்கானிஸ்தான் அரசு வலியுறுத்தி உ ள்ளது.

இதுகுறித்து அதிபர் அஷ்ரப் கனியின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இடையேயான சந்திப்பின்போது அரசு நடைமுறைகள் ரீதியாக அதிபர் டிரம்ப் பேசிய கருத்து குறித்து அமெரிக்கா தெளிவுப்படுத்த வேண்டும். ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுக்கு ஆப்கன் அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும். அதே நேரத்தில் ஆப்கனின் தலைமையில்லாத நிலையில் வெளிநாட்டு தலைவர்களால் ஆப்கானிஸ்தானின் தலைவிதியை தீர்மானிக்க முடியாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: