அகில இந்திய காங்கிரஸ் தலைவர் இல்லாததால் தமிழக காங்கிரஸ் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணிகள் முடங்கியது: டெல்லியில் கே.எஸ்.அழகிரி 3 நாள் முகாம்

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் இல்லாததால் தமிழக காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பட்டியல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கே.எஸ்.அழகிரி டெல்லியில் கடந்த மூன்று நாட்களாக முகாமிட்டு மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.  தமிழக காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்த திருநாவுக்கரசர் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மாற்றப்பட்டார். தேர்தல் நேரம் என்பதால் அவர் மாற்றப்பட வாய்ப்பில்லை என்று கூறப்பட்ட நிலையில் அவரை மாற்றிவிட்டு, புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டார். அவருடன் சேர்த்து 5 செயல் தலைவர்களையும் ராகுல்காந்தி நியமித்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.  காங்கிரஸ் வரலாற்றை எடுத்து பார்த்தால் புதிய தலைவர் மாற்றப்பட்டால் அவருக்கு வேண்டியவர்களை மாவட்ட தலைவர்களாகவும், மாநில நிர்வாகிகளாகவும் நியமிப்பது என்பது காலம் காலமாக நடக்கின்ற ஒன்று. ஏனென்றால், அந்த அளவுக்கு கோஷ்டி தலைவர்களின் தலையீடு கட்சியில் பூதாகரமாக இருக்கும். மாநில தலைவராக யார் இருக்கிறார்களோ அவரது ஆதரவாளர்கள் அதிக அளவில் இருந்தால்தான் அவரால் செயல்பட முடியும்.

அதற்கு காரணம், மற்ற கோஷ்டி தலைவர்களின் ஆதரவாளர்கள் ஒத்துழைப்பு கொடுக்காமல் குடைச்சல் கொடுப்பதுதான். எனவே, எந்த தலைவர் வந்தாலும் அவர் எடுக்கக்கூடிய முதல் வேலை புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவதாகத்தான் இருக்கும்.  தற்போது புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி கடந்த 3 மாதங்களாக தேர்தல் பணியில் அக்கறை காட்டி வந்தார். தேர்தல் பணிகள் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக தமிழக காங்கிரசில் அதிரடி மாற்றங்களை கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார். தற்போது மாவட்ட தலைவர்களில் 15க்கும் மேற்பட்டோர் திருநாவுக்கரசர் ஆதரவாளர்களாக உள்ளனர்.  மற்றவர்கள் பல்வேறு மூத்த தலைவர்களின் ஆதரவாளர்கள். கே.எஸ்.அழகிரியோ, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பின்னணி கொண்டவர் என்பதால் அவருக்கு ஆதரவான மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளை நியமிக்க அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 8 எம்பிகளை காங்கிரஸ் பெற்றாலும், அகில இந்திய அளவில் பெரும் தோல்வியை சந்தித்தது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று யாரும் எதிர்பாராதவிதமாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்தார். அவரை சோனியா காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் சமாதானப்படுத்தியும் அவர் ராஜினாமா முடிவை மாற்றவில்லை. இதனால் அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் கட்சி தலைமை இருந்து வருகிறது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 8 எம்பிக்களை பெற்றுள்ளதால் கட்சியை வலுப்படுத்தும் பணிகளை தொடங்க கே.எஸ்.அழகிரி முடிவு செய்துள்ளார். அதன் ஒரு பகுதியாக புதிய நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்துள்ளார். அதற்கான பட்டியலும் தயாரிக்கப்பட்டு விட்டது.

மாவட்ட தலைவர்களில் பெரிய அளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், தனது ஆதரவாளர்கள் சிலருக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் துணை தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட மாநில அளவிலான பதவிகளில் புதிய நிர்வாகிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளார். அதற்கான பட்டியல் டெல்லி தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.    எனவே, புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவதற்கான வாய்ப்புகள் உண்டா? என்பது குறித்து விவாதிக்க கடந்த 3 நாட்களாக கே.எஸ்.அழகிரி டெல்லியில் முகாமிட்டிருந்தார். அப்போது கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. பட்டியல் வெளியாகும் பட்சத்தில் தமிழக காங்கிரசில் பல்வேறு அதிரடி மாற்றம் ஏற்படும் என்று காங்கிரசார் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Related Stories: